
திருப்பூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து, மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியளிக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினரால் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமாரின் மரணச் சுவடு மறையும் முன்னரே மீண்டும் அதே பாணியில் அடுத்த அப்பாவியின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் வலுவடையத் துவங்கியுள்ளது.
மேலும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கஞ்சா கடத்தியதாக மாரிமுத்து மீது வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்ததாகவும், போதிய ஆதாரங்கள் இல்லாததால் கடந்த 29 ஆம் தேதி நீதிமன்றம் அவரை விடுதலை செய்ததாகவும் செய்திகள் உலா வரும் நிலையில், அன்று மாலையே அவரை வேறு ஒரு வழக்கில் வனத்துறை கைது செய்துள்ளதைப் பார்த்தால், ஏதோவொரு பழிவாங்கும் நடவடிக்கை போலத் தெரிகிறது.
காரணம், திமுக ஆட்சியில் காவல்துறையினரின் மூர்க்கத்தனத்தால் லாக்-அப் மரணங்கள் பெருகி வருவதையும், அரசு அதிகாரிகள் உட்பட ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் அதை மூடி மறைக்க முயற்சிப்பதையும் நாம் பலமுறை கண்டுள்ளோம்.
இனியும் இதுபோன்ற அராஜகங்கள் தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது. எனவே, உயிரிழந்த மாரிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்குவதோடு, அரசு அதிகாரிகள் சமபந்தப்பட்டுள்ள இந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டுமெனவும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.