நெல்லை ஆணவப் படுகொலை: சிபிசிஐடி விசாரணை தீவிரம்!

நெல்லையில் ஆணவப் படுகொலை தொடர்பாக சிபிசிஐடி விசாரணை...
CBCID police investigation on kavin honor killing case
சிபிசிஐடி x
Published on
Updated on
1 min read

நெல்லை ஆணவப் படுகொலை வழக்கில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

நெல்லையில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு நடந்த ஆணவப் படுகொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் கே.டி.சி. நகர் அருகே கவின் செல்வகணேஷ்(26) என்ற இளைஞர், தான் காதலித்த இளம்பெண்ணின் சகோதரனால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணும் பள்ளிப்பருவம் தொட்டே பழகி வந்துள்ளனர். இவர்களது நட்பு நாளடைவில் காதலாக மாறியது.

சம்பவம் நடந்த அன்று, கவின் தனது தாயாருக்கு சிகிச்சைக்காக சுபாஷினி பணிபுரியும் தனியார் சித்த மருத்துவ மையத்திற்கு வந்துள்ளார். கவின் வந்ததை அறிந்த சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித், கவினிடம் பேச வேண்டும் எனக் கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றதும், கவினை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் சுர்ஜித் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது.

உறவினர்கள் போராட்டம்

கவினின் உறவினர்கள், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை மற்றும் தாயாரை கைது செய்தால் மட்டுமே கவின் உடலைப் பெறுவோம் என திட்டவட்டமாகத் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் கவினின் சொந்த ஊரில் போராட்டங்கள் வெடித்துள்ளன. அரசு அதிகாரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய தினம், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கூறப்படும் சுர்ஜித்தின் தந்தை, காவல் உதவி ஆய்வாளர் சரவணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சிபிசிஐடி விசாரணை:

இந்த வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவம் கருதி, தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, கொலை நடந்த கே.டி.சி. நகரில் உள்ள நிகழ்வு இடத்திலிருந்து சிபிசிஐடி தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவரோஜ் நியமிக்கப்பட்டு, விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளார். சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் இத்தகைய ஆணவப் படுகொலை சம்பவங்கள் தடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

Summary

CBCID has begun its investigation into the Nellai honor killing case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com