
சென்னை: 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையை குற்றவாளி ஞானசேகரன் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அவருக்கு சிறையில் எந்தச் சலுகைகளும் வழங்கப்படக் கூடாது என்றும் மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். ராஜலட்சுமி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குற்றவாளி ஞானசேகரனுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலை. இரண்டாமாண்டு பொறியியல் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சென்னை மகளிா் நீதிமன்றம் கடந்த மே 28 ஆம் தேதி தீா்ப்பளித்தது. தீர்ப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள 12 சட்டப் பிரிவுகளில் 11 சட்டப் பிரிவுகளின் கீழ் ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி எம். ராஜலட்சுமி அறிவித்தாா். எனவே, ஞானசேகரன் குற்றவாளி என அவா் தீா்ப்பளித்திருந்த நிலையில், இன்று ஆயுள் தண்டனை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மகளிர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த தண்டனை விவரத்தில், குற்றவாளி ஞானசேகரன், குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும், தண்டனைக் குறைப்பின்றி அவர் 30 ஆண்டுகளும் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி எம். ராஜலட்சுமி பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
எந்தெந்த குற்றம் - என்ன தண்டனை?
அதாவது, அண்ணா பல்கலை மாணவி, பல்கலை வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 30 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதில், கடுமையாக தாக்கியதற்காக 7 ஆண்டுகள், ஆதாரங்களை அழித்தற்கு 3 ஆண்டுகள், தனிநபர் அந்தரங்க உரிமைகளை மீறியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தியக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறை, கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட 12 பிரிவுகளில் 11 பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தனித்தனியாக தண்டனை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
கடுங்காவல் சிறைத் தண்டனை போல, ஞானசேகரனுக்கு சிறையில் எந்த சலுகைகளும் காட்டக் கூடாது என்றும் ஞானசேகரன் குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.