பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
உட்கட்சி பூசலுக்கு மத்தியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மூத்த நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வந்த நிலையில் தற்போது அது பூதாகரமாக வெடித்துள்ளது.
அன்புமணி ராமதாஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ராமதாஸ், அன்புமணி செயல் தலைவர் பதவியை ஏற்று பணியாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், கட்சியில் உள்ள அன்புமணியின் ஆதரவாளர்களை பதவியில் இருந்து நீக்கி வருகிறார். இதனிடையே, கட்சிக்கு நான்தான் தலைவர் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
தனது பலத்தை நிரூபிக்கும் நோக்கில், சென்னை சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு அன்புமணி அழைப்பு விடுத்த நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் வருகை தந்து அன்புமணிக்கு ஆதரவளித்துள்ளனர்.
அந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி, “கட்சிக்கு கொள்கை வழிகாட்டி ஐயா ராமதாஸ். அவர்தான் நம் குல தெய்வம், சமூக நீதி உள்ளிட்ட அவரது வழியைப் பின்பற்றி வெற்றி பெறுவோம். கட்சியின் தலைவராக நான் செயல்படுவேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஏற்பாட்டின் பேரில், தைலாபுரம் இல்லத்துக்கு சென்ற அன்புமணி, தனது தந்தையும் கட்சியின் நிறுவனருமான ராமதாஸை சந்தித்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
இருவரின் ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.