அரசு பெண் விடுதிகளில் இனி பெண் காவலர்கள் நியமனம்: அமைச்சர் கீதா ஜீவன்

சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி
geetha jeevan press meet
அமைச்சர் கீதா ஜீவன்DIN
Published on
Updated on
2 min read

பெண்களுக்கான அரசின் அனைத்து சேவை இல்லங்களிலும் இனி பெண் காவலர்களே நியமிக்கப்படுவர் என சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

சிட்லபாக்கம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமி பாலியல் தொந்தரவுக்கு ஆளானது பற்றி சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள சமூக நல ஆணையரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அவர் பேசுகையில்,

"சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரக்கூடிய அரசு சேவை இல்லத்தில் தேவைக்கேற்ப குழந்தைகள் அதில் தங்கி கல்வி பயின்றும் தொழில் பயிற்சி மேற்கொண்டும் வருகிறார்கள். குறிப்பாக அந்த தங்கும் விடுதியில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஒருவர் ஈடுபட்டுள்ளார் என்கிற செய்தி அறிந்து நாங்கள் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு சென்று விசாரித்து பின்னர் அவரது தாயாரை நேரில் சென்று சந்தித்தோம்.

சிறுமியின் தாயார், சிறுமியின் பெயர், முகவரி, அடையாளம் குறித்து எதுவும் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் உரிய புகார் அளிக்கப்பட்டு புகாரின் அதன் அடிப்படையில் தங்கும் விடுதியில் பணிபுரிந்து வரும் காவலாளியை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்கும்படி தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நாங்கள் தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம்.

ஆண் காவலர்களுக்கு பதிலாக பெண் காவலர்கள் மூன்று பேர் நியமனம் செய்ய உள்ளோம். சமையல் செய்யக்கூடிய நபர் அந்த தங்கும் விடுதியில் இருந்து வெளியில் சென்ற நேரத்தில் காவலாளி உள்ளே புகுந்து சிறுமியிடம் பாலியல் தொந்தரவு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும் கூடுதலாக நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்து அறிவுரை வழங்கி வருகிறோம்.

மேலும் விடுதிக்கென தனியாக சிசிடிவி கேமராக்கள் அமைப்பதற்கான பணிகளையும் மேற்கொள்ள இருக்கிறோம். இனி வரக்கூடிய காலகட்டங்களில் தமிழகத்தில் உள்ள அரசு நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களின் மூலமாக நடத்தப்படக்கூடிய விடுதிகளில் பெண் காவலர்கள் தொடர்ந்து நியமிக்கப்படுவார்கள்.

இதுவரையில் கைது செய்யப்பட்ட காவலாளி குறித்து எந்த ஒரு புகாரும் வராத நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் அவர் ஈடுபட்டிருப்பது குறித்து தீவிர விசாரணை துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரையில் 138 பிள்ளைகளிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், வேற எந்த சிறுமியும் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகவில்லை என தெரிய வந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண் தற்பொழுது சிகிச்சை முடிந்து நல்ல நிலையில் உள்ளார். இதுவரை இதுபோன்ற நிகழ்வு நடந்ததில்லை. இனிமேல் இது போன்ற நிகழ்வு நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும். எனவே, மாணவிகளோ சிறுமிகளோ எந்த ஒரு அச்சமும் இன்றி இங்கு வந்து தங்கலாம்.

திருப்பூர் சம்பவம் தொடர்ந்து இரவு தங்கக்கூடிய பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக பெண் ஒருவர் எப்பொழுதும் இருக்குமாறும் அதேபோல் பெண் பிள்ளைகளை பார்க்க வருகை புரியக் கூடியவர்களின் வருகை பதிவேட்டையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களுக்கு எதிராக தண்டனைகளை மிகவும் கடினமாக மாற்றியமைத்துள்ளோம்.

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறையின் மூலமாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் தங்கி உள்ள பெண் பிள்ளைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை பொருட்டு பெண் காவலர்கள் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

குறிப்பாக இந்த சம்பவத்தன்று வார்டன் விடுப்பில் சென்றுள்ள காரணத்தினால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர்பாகவும் வார்டன் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளோம். துறைகள் ரீதியாக மக்கள் புகார் தெரிவிக்க கூடிய அழைப்புகள் அதிகரித்துள்ளது.

சிறுவயதிலேயே திருமணம், சிறு வயதிலேயே கருத்தரித்தல் சம்பவங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு வழங்குவதற்கு துறை ரீதியாக திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com