
கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் இன்று(திங்கள்கிழமை) ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை புறநகரில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்துதான் தற்போது தென் மாவட்டங்களுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் மாற்றியது முதலே பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னைக்குள் இருந்து புறநகரில் உள்ள கிளாம்பாக்கம் செல்வதே பயணிகளுக்கு மிகுந்த அவதியாக இருந்து வருகிறது. அதன்பிறகு அவர்கள் பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். இதனால் பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து போதிய பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுந்து வருகிறது. இரவு நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி கடந்த வாரம் பயணிகள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பக்ரீத் விடுமுறையையொட்டி கடந்த சில நாள்களாக ஊருக்குச் செல்லும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். பலரும் பேருந்து கிடைக்காமல் தவித்ததாக புகார் கூறி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
முன்னதாக பக்ரீத் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை விளக்கம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.