கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவு!

தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பற்றி...
Madras HC
சென்னை உயர்நீதிமன்றம்கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டுக்கு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருவதாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்தால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாகவே அறிவித்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 25% இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை இந்தாண்டு தொடங்கப்படவில்லை, இந்த திட்டம் முடக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், லட்சுமி நாராயணன் அமர்வு முன்பாக விசாரணையில் இருந்து வருகிறது. முந்தைய விசாரணையில் தமிழகத்திற்கு ஏன் நிதி வழங்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அனைத்து மாநிலங்களுக்கும் நிதி வழங்கப்படுவதாகவும் ஆனால் சில காரணங்களால் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அது ஏன்? என்று நீதிபதிகள் மீண்டும் கேள்வி எழுப்ப, அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், 'மத்தியில் ஆளும் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு எம்.பி.கூட இல்லை என்பதால் ஒதுக்கவில்லை' என்று குறிப்பிட்டார்.

'கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தில், 60% தொகையை மத்திய அரசும், 40% தொகையை மாநில அரசும் அந்தந்த பள்ளிகளுக்கு அளிக்கின்றன. ஆனால், 2021 முதல் 2023 வரை மத்திய அரசு எந்த நிதியும் ஒதுக்காததால், 100% நிதியையும் மாநில அரசே வழங்கியது' என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25% இட ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், தேசிய கல்விக் கொள்கை நிதியுடன் இதனை தொடர்புபடுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவரசமாக விசாரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com