மாம்பழங்களுக்கு ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்- சீமான்

மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையை தமிழ்நாடு அரசு நிர்ணயிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
seeman
சீமான் (கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையை தமிழ்நாடு அரசு நிர்ணயிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நடப்பாண்டில் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும் போதிய விலை கிடைக்காததால் மாம்பழ விவசாயிகள் பெரிதும் நட்டத்திற்கு ஆளாகியுள்ளது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிக்காமல் ஏமாற்றிவரும் திமுக அரசின் விவசாயிகள் விரோதப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

நெல், கரும்பு உள்ளிட்ட ஒரு சில பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்துள்ளதுபோல வேளாண் பெருமக்கள் விளைவிக்கும் அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டுமென வேளாண் பெருங்குடி மக்கள் நெடுங்காலமாகப் போராடி வருகின்றனர். ஆனால் நெல், கரும்புக்கே உரிய ஆதார விலை அளிக்காமல் ஒன்றிய - மாநில அரசுகள் ஏமாற்றி வருகின்றன. ஒரே விளைபொருளுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கொள்முதல் விலை இருப்பது இந்த நாட்டில் மட்டுமே நிகழும் மாபெரும் அநீதியாகும்.

வேளாண் பொருட்களுக்கு உரிய ஆதார விலை நிர்ணயிக்க மறுத்து, விவசாயிகளை நட்டத்திற்கு ஆளாக்கி, அவர்களது குடும்பத்தை வறுமையில் வாடவிடும் திமுக அரசு, வேளாண்மைக்குத் தனிநிதிநிலை அறிக்கை வெளியிடுவதையே பெரும் சாதனை போல் விளம்பரம் செய்வது வெட்கக்கேடானது.

ஆந்திர மாநில அரசு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலை நிர்ணயித்து அம்மாநில மாம்பழ விவசாயிகளைப் பெரும் நட்டத்திற்கு ஆளாகாமல் காத்துள்ளது. அதுமட்டுமின்றி, அங்குள்ள மாம்பழக்கூழ் தொழிற்சாலைகளிடம் பிற மாநில மாம்பழங்களைக் கொள்முதல் செய்யக்கூடாது என்றும் ஆணையிட்டுள்ளது. இதனால், அங்குள்ள மாம்பழக்கூழ் தயாரிப்பு நிறுவனங்கள் ஆதார் அட்டை, வங்கி முகவரியை சோதித்து தமிழ்நாட்டு மாம்பழங்களைத் திருப்பி அனுப்புகின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் அப்படியான எந்தக் கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை; மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலையும் திமுக அரசு நிர்ணயிக்கவில்லை. இதனால் மாம்பழங்கள் அதிகம் விளைந்தும்கூட, உரிய விலை கிடைக்காமல் தமிழக மாம்பழ விவசாயிகள் பெரும் நட்டத்திற்கு ஆளாகி, இழப்பீடு கேட்டு வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

திமுக அரசு அந்த இழப்பீட்டையும் வழங்க மறுப்பதால் மாம்பழங்களை வீதியில் கொட்டிவிட்டு வேளாண் பெருங்குடி மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கின்றனர்.

விளைச்சல் குறைந்தால் உற்பத்தி செலவைக்கூட ஈடுசெய்ய முடியாமல் நட்டத்திற்கு ஆளாகும் விவசாயிகள், அதிக விளைச்சல் கண்டாலும் உரிய விலை கிடைக்காமல் நட்டத்திற்கு ஆளாகும் நிலையென்பது மிகப்பெரிய கொடுமையாகும்.

கடுமையான உழைப்பும், அந்த உழைப்புக்கேற்ற விளைச்சலும் கிடைத்த பின்னும் விவசாயிகள் வறுமையில் வாடி, பட்டினியாகப் படுத்துறங்க நேர்ந்தால் இந்த நாடு மாபெரும் பஞ்சத்தை எதிர்கொள்வதை எவராலும தடுக்க முடியாது என எச்சரிக்கிறேன்.

தட்கல் டிக்கெட் - ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? முழு விவரம்

ஆகவே, தமிழ்நாட்டு மாம்பழ விவசாயிகளை நட்டத்திலிருந்து காத்திட தமிழ்நாடு அரசு உடனடியாக, மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்க வேண்டும்; விலை குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மாம்பழ விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும் வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு மாம்பழங்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயிக்கக்கோரியும், உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தோள் கொடுத்துத் துணை நிற்கும் என்று உறுதியளிக்கின்றேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு இனிக்காத மாங்கனி! 10 ஆயிரம் ஹெக்டோ் சாகுபடி பரப்பு குறையும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com