பெரியார், அண்ணா சர்ச்சை விடியோ: இந்து முன்னணிக்கு ஓபிஎஸ் கண்டனம்!

இந்து முன்னணிக்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...
o pannerselvam 2
ஓ. பன்னீர்செல்வம்கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

முருக பக்தர்கள் மாநாட்டில், பெரியார் மற்றும் அண்ணாவை விமர்சித்து விடியோ வெளியிட்ட இந்து முன்னணி அமைப்புக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி அமைப்பினர் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில் பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட தலைவர்களை விமர்சித்து விடியோ ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”பகுத்தறிவுச் சிந்தனைகளை பட்டிதொட்டியெங்கும் எடுத்துச் சென்று சமுதாயத்தில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார். தந்தை பெரியாரின் கொள்கைகளை, திராவிட சித்தாந்தத்தை முன்னிறுத்தி, தேர்தலில் களம் கண்டு தமிழக அரசியலில் மிகப் பெரிய ஆட்சி மாற்றத்தை உருவாக்கிய பெருமைக்குரியவர் பேரறிஞர் அண்ணா.

பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறான ஆட்சி தமிழ்நாட்டில் நடைபெற்றபோது அதனை எதிர்த்து, பேரறிஞர் அண்ணாவின் பெயரில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தைத் தொடங்கி, கட்சியின் கொடியில் அவரது உருவத்தைப் பொரித்து, தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியினை அமைத்தவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து, நான்கு முறை அதிமுக ஆட்சியை அமைத்தவர் அம்மா. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தமிழக மக்களால், மக்கள் சக்தியை தன்னகத்தே கொண்ட எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா ஆகியோரால் மதிக்கப்பட்ட, போற்றப்பட்ட தலைவர்கள் தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகியோர். நாங்களும் அந்த வழியைப் பின்பற்றி கொண்டு வருபவர்கள்தான்.

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கிய தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து 'முருக பக்தர்கள் மாநாடு' என்ற போர்வையில் இந்து முன்னணி கண்டனத்திற்குரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com