பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை! - இபிஎஸ்

பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க ஸ்டாலினுக்கு அவசியம் இல்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதைப் பற்றி...
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி.
Published on
Updated on
2 min read

முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்து முன்னணி அமைப்பினர் முருக பக்தர்கள் மாநாடு நடத்தினர். இந்த மாநாட்டில் பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட தலைவர்களை விமர்சித்து விடியோ ஒளிபரப்பப்பட்டது.

அதைத் தொடர்ந்து வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு களப்பணிக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு விழாவில், “அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நான்காண்டுகள் ஆட்சியில் மக்களுக்கு ஒன்றுமே செய்யாத முதல்வர், போட்டோஷூட் மேடை போட்டு -அரசு விழா என்ற பெயரில் அரசியல் பேசுகிறார். அதிமுகவைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில், இன்று திருப்பத்தூரில் பேசியுள்ள முதல்வர், "அண்ணா பெயரை அதிமுக அடமானம் வைத்துவிட்டது" என்கிறார்.

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கும், திமுகவுக்கும் கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா? "அண்ணா- இதய மன்னா" என்று கண்ணீர் வடித்த கையோடு அவர் கொள்கைகளை குழி தோண்டி புதைத்து, அண்ணாவின் கட்சியையும், ஆட்சியையும் கபளீகரம் செய்து, குடும்பக் கொள்ளையின் கூடாரமாக திமுகவை கருணாநிதி மாற்றியதன் விளைவாக, அண்ணாவின் கொள்கை விழுமியங்களை நெஞ்சில் ஏந்திய அவரின் இதயக்கனி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.

ஒருநாள், ஒரு நொடிகூட, எங்கள் பெயரிலும், கொடியிலும் மட்டுமல்ல, எங்கள் குருதியிலும் குடியிருக்கும் அண்ணாவை விட்டுக்கொடுக்க மாட்டோம். அண்ணாவின் கொள்கைகளுக்கு மாறாக, குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டு, கமிஷன்- கலெக்‌ஷன்- கரப்ஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் எல்லாம் எங்களுக்கு பெரியார், அண்ணா பற்றி பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!

இன்று வானத்திற்கும் பூமிக்கும் முழங்கும் ஸ்டாலினுக்கு, 1999- 2004 காலத்தில், மத்தியில் பதவி சுகத்தை அனுபவிக்கும் போதெல்லாம் தெரியாதா? யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?

கச்சத்தீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டை, அதன் உரிமைகளை அடகு வைத்ததும், வைக்கத் துணிவதும் திமுக தான்! தன்மானமிக்க தமிழ்நாட்டு மக்கள், பகல்வேஷக் கட்சியான திமுகவை 2026-ல் நிச்சயம் விரட்டியடிப்பார்கள்!

திமுகவால் பறிபோன தமிழ்நாட்டின் அமைதி, வளம், வளர்ச்சி, மாநில உரிமை என அனைத்தையும் நான் மீட்டுத் தருவேன்! இதுவே, தமிழ்நாட்டு மக்களுக்கு நான் அளிக்கும் 2026 தேர்தலுக்கான முதல் வாக்குறுதி!

Summary

Former Chief Minister and AIADMK General Secretary Edappadi Palaniswami has said that we do not need to learn lessons from Chief Minister Stalin or Periyar and Anna.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com