
பருத்திக்கு உரிய விலை பெற அதனை தரம்பிரித்து ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்குக் கொண்டுவந்து விற்பனை செய்து விவசாயிகள் பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பருத்தி சராசரியாக 3.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 52,700 மெட்ரிக் டன் பஞ்சு உற்பத்தி செய்யப்படுகிறது. 2024-25ஆம் ஆண்டில், மூன்றாவது முன்மதிப்பீட்டின்படி தமிழ்நாட்டில் 2.55 இலட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு 36,000 மெட்ரிக்டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நெல் தரிசில் பருத்தி 54,700 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு 7,700 மெட்ரிக்டன் பஞ்சு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஆர்சிஎச் 659 பிஜி II , ஆர்சிஎச் 386 பிஜி II, சூப்பர்காட் 115 பிஜி II, போன்ற பருத்தி இரகங்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டன. நடப்பு ஆண்டில் 4.4 இலட்சம் ஏக்கரில் பருத்தி சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது டெல்டா மாவட்டங்களிலுள்ள 17 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 14,115 விவசாயிகள் மற்றும் 26 வர்த்தகர்கள் பருத்தி பரிவர்த்தனை செய்திட பதிவு செய்துள்ளனர்.
இதுவரை, 9 கோடி ரூபாய் மதிப்பிலான 1,511 மெட்ரிக் டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கேற்ப குவிண்டால் ஒன்றிற்கு அதிகபட்ச விலையாக ரூ.7,700, குறைந்தபட்ச விலையாக ரூ.4,111, சராசரி விலையாக ரூ.5,850 என்ற அளவில் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தொடர்ந்து பருத்தி பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இயல்பாக பருத்தியின் தரத்திற்கேற்ப ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வியாபாரிகளால் மின்னணு தேசிய வேளாண் சந்தை வாயிலாக (e-NAM), மறைமுக ஏலமுறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி தமிழ்நாடு முழுவதும் இதுவரை 1,976 மெட்ரிக் டன் பருத்தி பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. பருத்தியின் தரத்திற்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவதால் பருத்தியின் தரத்தை நிர்ணயிக்கும் காரணிகளான ஈரப்பதம் (Moisture), இழை நீளம் (staple length), இழையின் நுண்மைத்தன்மை (Micronaire), முதிர்ச்சி மற்றும் நீண்ட இழை தரக்கூடிய பருத்தி இரகங்கள் குறித்து வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தேசிய பருத்தி வாரியமும் தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் பருத்தியில் இலாபகரமான விலைபெற பருத்தியைத் உலர்த்தி, தரம்பிரித்து அருகிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மாநில அலுவலர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொண்டு, விவசாயிகள் மற்றும் , வியாபாரிகளுடன் கூட்டங்கள் நடத்தி, பருத்திக்கு இலாபகரமான விலை கிடைக்கச்செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பருத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பருத்திக்கு உரிய விலை கிடைக்காததை கண்டித்து ஜூலை 1ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
summary
Government issues important instructions to farmers to get fair price for cotton
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.