தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி: தவெக

மத்திய பாஜக அரசுக்கு தவெக கண்டனம்.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்கோப்புப்படம்
Published on
Updated on
3 min read

தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி என்று தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கொண்டு வரப்படும் இந்தப் புதிய நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும்! எனவே இது குறித்துத் தெளிவுபடுத்த, தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.

பிகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், கடந்த 24.06.2025 அன்று இந்தியத் தேர்தல் ஆணையம், 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (Special Intensive Revision) என்ற ஒன்றைப் பிகாரில் முன்னெடுக்கப் போவதாக அறிவித்தது. அதன்படி, தேர்தல் ஆணைய அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களின் ஆவணங்களை, தனிப்பட்ட விவரங்களைச் சரிபார்த்து, வாக்காளர் பட்டியலை இறுதி செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'இப்படிச் செய்வதன் மூலம் விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும்; தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை நீக்க முடியும்; வெளிப்படைத்தன்மையோடு வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க முடியும்' என்று இந்தியத் தேர்தல் ஆணையம் காரணம் சொல்கிறது.

ஆனால், பிகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ளன. அடுத்த ஆண்டு, தமிழ்நாடு உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அவசர அவசரமாகத் தேர்தல் ஆணையம் இப்படிப்பட்ட முடிவை எடுத்திருப்பது பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.

ஏனெனில், கடைசியாக பிகாரில் 2003-ஆம் ஆண்டுதான் இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தத்தின்படி வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு, கடந்த 22 ஆண்டுகளில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்கள் பலவும் நடந்து முடிந்துவிட்டன. அப்போதெல்லாம் இதுபோன்ற ஒரு திருத்தத்தைச் செய்யாத தேர்தல் ஆணையம், இப்போது திடீரென மீண்டும் இந்தத் திருத்தத்தைக் கையிலெடுக்கக் காரணம் என்ன?

இந்தச் சரிபார்க்கும் திட்டத்தின்படி, ஒரு சராசரிக் குடிமகனிடம் பிறப்புச் சான்றிதழோ, குடும்ப அட்டையோ, ஆதார் அடையாள அட்டையோ அல்லது தேர்தல் ஆணையம் குறிப்பிடும் ஆவணங்களில் எதாவது ஒன்று இல்லையென்றால், அதற்காகவே அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடுமா? என்ற சந்தேகத்தை அரசியல் செயற்பாட்டாளர்கள் எழுப்புகிறார்கள். இது குறித்த எந்த ஒரு விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் அளிக்கவில்லை.

ஒருவேளை வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்ட ஒருவர், மீண்டும் உரிய ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தால், அதைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்த பிறகு, அவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஆனால், இப்படி மாநிலம் முழுவதும் இருந்து விண்ணப்பிக்கும் வாக்காளர்களின் ஆவணங்களைச் சரிபார்க்க, நீண்ட கால அவகாசம் தேவைப்படும் அல்லவா?

பொதுவாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களைப் பெற அரசு அலுவலகங்களை நாடிச் சென்றால் அங்கு, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுவதோடு மட்டுமல்லாமல், இது போன்ற ஆவணங்களைப் பெறுவதற்கான வேலைகள் முடிவடைய குறைந்தது மூன்று மாதங்கள் முதல், ஆறு மாதங்கள், ஒரு வருடம் எனப் பாமர மக்கள் அலைந்து திரிந்துதான் ஆவணங்களைப் பெறக் கூடிய சூழல் நிலவுகிறது.

அப்படி இருக்கையில், நான்கு மாதங்களில் தேர்தலை வைத்துக்கொண்டு, நீண்ட கால அவகாசம் பிடிக்கும் இதுபோன்ற ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்துவது பொருத்தமான நடவடிக்கையா? என்ற சந்தேகமும் எழுகிறது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வாக்கு விகிதத்தை அதிகரிப்பதற்காக இருக்க வேண்டுமே தவிர அதற்கு எதிராக அல்ல.

மேலும், இந்தப் புதிய நடைமுறை, வாக்காளர்களின் அடிப்படை உரிமை மீதே கைவைப்பது போல இருக்கிறது. ஏனெனில் அசாமில், இதுபோன்ற முறையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்தபோது, அதில் நடந்த குளறுபடிகள் விளிம்புநிலை மக்களை எப்படியெல்லாம் பாதித்தது என்பதை நாடு இன்னும் மறக்கவில்லை.

நடைமுறைச் சிக்கல்கள் ஒருபுறமென்றால், இன்னொரு புறம், இந்தத் திருத்தத்தின் பின்னால் ஏதும் அரசியல் காரணங்கள் இருக்கின்றனவா? என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. இந்தத் திருத்தத்தைப் பயன்படுத்தி, அரசியல் கட்சிகள் உள்ளூர் அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு தங்களுக்குச் சாதகமில்லாத, எதிர் மனநிலையில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவிடக் கூடிய பேராபத்து இருக்கிறது.

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையின மக்களின் பெயர்கள் இறுதி நிமிடத்தில் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டன என்பது போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளியானது அனைவருக்கும் நினைவிருக்கும். ஒருவேளை, இந்தத் திருத்தத்தின் வழியே இப்படியான அராஜகங்கள் நிகழ்த்தப்பட்டால், அது குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்; இந்திய ஜனநாயகத்தையே கேள்விக்கு உள்ளாக்கும் செயல்.

நம் தமிழகத்தில் ஏறத்தாழ 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில், கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது பதிவான வாக்கு சதவீதம் 69.72%. தேசிய

சராசரியைவிட இது மூன்றரை சதவீதம் அதிகம். ஆனால், இந்தச் சிறப்புத் தீவிரத் திருத்தம் அடுத்தபடியாக தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டால் இந்த வாக்கு சதவீதம் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஏற்கனவே, தமிழ்நாடு என்றாலே மத்தியில் ஆள்பவர்களுக்கு அலர்ஜி. இந்தத் திருத்தத்தைக் காரணமாக வைத்து மதச் சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினச் சமூகத்தினர் ஆகியோரின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க நினைத்தால், அதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாக எதிர்வினையாற்றும்.

ஜனநாயகத்தின் மாண்பைக் கேள்விக்கு உள்ளாக்கும் இந்தப் புதிய திருத்தத்திற்குப் பதிலாக, நடைமுறையில் இருக்கும் திட்டத்தின்படியே செயல்பட, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது அறிவுறுத்தலின்படி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறோம். அரசியல் வேற்றுமைகளைப் புறந்தள்ளி, இந்த விவகாரத்தில் இந்திய அரசியல் அமைப்பைக் காக்க, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Summary

Adhav Arjuna has said that Tamil Nadu is allergic to those who rule at the center.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com