நீதியை நிலைநாட்ட வேண்டும்: காவல்துறையினருக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

காவல்துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்...
CM stalin instructions to the police officials
காவல்துறையினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைDIPR
Published on
Updated on
2 min read

காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வரும் மக்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டு அவர்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர், காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின்  சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வு செய்ததோடு, காணொலிக் காட்சி வாயிலாக மத்திய, மேற்கு மற்றும் தெற்கு  மண்டல காவல்துறை தலைவர்களுடனும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது முதல்வர், காவல் துறை மண்டல வாரியாக ஆய்வு மேற்கொண்டு, குற்றங்கள் குறித்தும், அவைகள் மீது எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்ததோடு,  நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். காணொலி ஆய்வில் கலந்து கொண்ட மண்டல காவல்துறை தலைவர்கள் தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து விளக்கி கூறினார்கள்.

இக்கூட்டத்தில் முதல்வர், திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு, பொது அமைதியை மிக கவனமாக கையாண்டு வருவதையும், இவ்வரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை அதிகரித்துள்ளதையும் குறிப்பிட்டு, அத்துடன் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ்கின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கின்றது என்றால் அதற்கு காவல்துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாய் விளங்குகின்றது என்று குறிப்பிட்டார். 

மேலும், காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வருகின்ற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொண்டு, அவர்களது புகார்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கைள் மேற்கொள்ள அறிவுறுத்தினார். 

மேலும், கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத்தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

சட்டம் - ஒழுங்கு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்போது தொடர்புடைய காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களைச் சந்தித்து அந்த பிரச்சினை குறித்து தெளிவாக விளக்கம் அளித்து, வதந்திகள் பரவுவதை தடுத்திடவும், காவல்துறையின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் அது உதவும் என்றும் சுட்டிக்காட்டினார். 

சாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுவர்கள், வதந்தி மற்றும் வெறுப்புணர்வை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ஆகியோர் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்திட அறிவுறுத்தினார். 

பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது, குற்றத்தடுப்பு நடவடிக்கைகளில், சமுதாயத்தின் பங்களிப்பை ஊக்குவிப்பது  போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றச் செயல்கள் நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சட்டம் - ஒழுங்கைப் பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister M.K. Stalin has instructed the police to treat people who come to police stations with dignity and take action on their complaints to ensure justice is served.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com