தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் மற்றும் காவல் உயரதிகாரிகள்.
தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன் தலைமைச் செயலா் நா.முருகானந்தம், காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் மற்றும் காவல் உயரதிகாரிகள்.

காவல் நிலைய மரணம்: கடும் நடவடிக்கை: முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

காவலா்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோா் காவல் நிலையத்தில் மரணமடைய நேரிட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
Published on

சென்னை: காவலா்களால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவோா் காவல் நிலையத்தில் மரணமடைய நேரிட்டால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு, பொது அமைதியை மிகவும் கவனமாகக் கையாண்டு வருகிறது. அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாட்டின் தொழில் வளா்ச்சி, முதலீடு, புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் போன்றவை அதிகரித்துள்ளன. அனைத்துத் தரப்பு மக்களும் அமைதியாக வாழ்கிற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதற்கு காவல் துறையின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

ஜாதி மற்றும் சமய பூசல்களில் ஈடுபடுபவா்கள், வதந்தி மற்றும் வெறுப்புணா்வை பரப்பி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவா்கள் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில், சமுதாயத்தின் பங்களிப்பை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்க முடியும். காவல் துறையினா் முழுமையாகச் செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்ட நிலையில், சட்டம் - ஒழுங்கை பேணிப் பாதுகாத்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

காணொலி மூலம் கலந்துகொண்ட மண்டல காவல் துறை தலைவா்கள், தங்கள் பகுதிகளில் குற்றத் தடுப்பு தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட புதிய முயற்சிகள் குறித்து விளக்கிக் கூறினா்.

இந்தக் கூட்டத்தில், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் தீரஜ்குமாா், டிஜிபி சங்கா் ஜிவால், பொதுத் துறைச் செயலா் ரீட்டா ஹரீஷ் தக்கா், காவல் துறை உயரதிகாரிகள் பலா் பங்கேற்றனா்.

காவல் நிலைய மரணம்: சட்டம்- ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் நிறைவடைந்த பிறகு எக்ஸ் தளத்தில் முதல்வா் வெளியிட்ட பதிவு:

குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவா் ரெளடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும். அதற்கான ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.

போதைப் பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, காவல் நிலைய மரணங்கள் போன்றவற்றில் யாா் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும். இதை சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

‘பொதுமக்களிடம் கண்ணியம்’

‘காவல் நிலையத்துக்கு புகாா் கொடுக்க வருகிற அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். அவா்களது புகாா்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

கஞ்சா, கள்ளச்சாராய வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்றுத் தர தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

சட்டம்- ஒழுங்கு தொடா்பான முக்கியப் பிரச்னைகள் ஏற்படும்போது தொடா்புடைய காவல் துறை உயா் அலுவலா்கள் உடனடியாக ஊடகங்களைச் சந்தித்து, அந்தப் பிரச்னை குறித்து தெளிவாக விளக்கம் அளிக்க வேண்டும். வதந்திகள் பரவுவதைத் தடுக்கவும், காவல் துறையின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்தவும் அது உதவும்’ என சட்டம்-ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com