பாரதியார் பல்கலை.க்குள் புகுந்த சிறுத்தை! மாணவர்கள் வெளியேற்றம்!

பாரதியார் பல்கலைக்கழகத்துக்குள் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது பற்றி...
பாரதியார் பல்கலைக்கழகத்துக்குள் ஆய்வு செய்யும் வனத்துறை அதிகாரிகள்.
பாரதியார் பல்கலைக்கழகத்துக்குள் ஆய்வு செய்யும் வனத்துறை அதிகாரிகள்.Din
Published on
Updated on
1 min read

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை புகுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கட்டட வேலைகள் நடைபெறும் பகுதியில் இன்று சிறுத்தை நடமாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில், வனத் துறையினர் தற்போது அப்பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சிறுத்தையின் நடமாட்டத்தை உறுதிப்படுத்த அவர்கள் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி உள்ளனர். மேலும், சிறுத்தையை பாதுகாப்பாக பிடிப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.

பல்கலைக் கழக நிர்வாகத்தினர், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சிறுத்தையை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வனத் துறையினரிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். சிறுத்தை பிடிபடும் வரை மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வளாகத்திற்குள் நடமாடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், சிறுத்தை நடமாட்டம் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும், நாளை பல்கலைக் கழக மைதானத்தில் விளையாட்டுப் போட்டி ஒன்று நடைபெற இருந்த நிலையில், அந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுப் போட்டிக்காக இன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், பல்கலைக்கழகத்தின் அனைத்து நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது மாணவர்கள் இடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையை பத்திரமாக பிடித்து வனப்பகுதிக்குள் விடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com