கை ரிக்‌ஷாவைப்போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டும்: நீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுகள் வெறும் காகிதளவில் மட்டுமே இருப்பதாக நீதிமன்றம் வேதனை
கை ரிக்‌ஷாவைப்போல சாதியும் ஒழிக்கப்பட வேண்டும்: நீதிமன்றம்
Published on
Updated on
1 min read

நீதிமன்ற உத்தரவுகள் வெறும் காகிதளவில் மட்டுமே இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து அந்த சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு தெரிவிக்க ஏற்கெனவே அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவகாசம் கேட்டு கூடுதல் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி கூறியதாவது, ``அரசு பள்ளியில் சேரும்போது சாதிகள் இல்லையடி பாப்பா என்றும், சாதி இரண்டொழிய வேறில்லை என்றும் கற்றுக் கொடுத்தது. இன்று நீதிபதியான நிலையில், படித்த பாடங்களின் அடிப்படையில் நிற்க வேண்டாமா?

குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே உறுப்பினராக இருக்கலாம் என்ற விதியை திருத்தும்படி சங்கங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது. இருப்பினும், அந்த உத்தரவுகள் வெறும் காகிதளவிலேயே உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, எந்த சங்கங்களும் தங்கள் விதிகளில் திருத்தங்கள் செய்யவில்லை என்பது வேதனைக்குரியதே.

நீதிமன்றத்தின் உத்தரவாக இருந்தாலும், சாதியை தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை ஒருபோதும் கைவிட மாட்டார்கள். நிலவுக்கே சென்றாலும் அவர்கள் சாதியையும் தூக்கிச் செல்வார்கள். படிப்படியாகவே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். அதற்கான நேரம் இதுவே.

கை ரிக்ஷாவை ஒழித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழக அரசு மேற்கொண்ட நிலையில், இந்த விஷயத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால் நாளைய வரலாறு அதனை நினைவு கொள்ளும்’’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க மார்ச் 14 ஆம் தேதிவரையில் அவகாசம் அளித்ததுடன், அன்றைய நாளில் அரசு விளக்கம் அளித்தாலும் அளிக்காவிட்டாலும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி திட்டவட்டமாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com