தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்புகள்!

இதய நோயால் பாதிக்கப்படும் இளம் பெண்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2025, 8:59 pm

Din

இதய நோயால் பாதிக்கப்படும் இளம் பெண்களின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா்.

இதுதொடா்பாக ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையின் இதய இடையீட்டு சிகிச்சைத் துறை தலைவரும், பேராசிரியருமான டாக்டா் செசிலி மேரி மெஜல்லா கூறியதாவது:

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். இது பெண்களின் இனப்பெருக்கம், ஆரோக்கியமான மனநிலைக்கு பெரிதும் பங்களிக்கும் ஒரு சுரப்பி. அதேபோன்று இதய நலனைக் காப்பதிலும் ஈஸ்ட்ரோஜின் பெரும் பங்கு வகிக்கிறது.

இதனால், மாதவிடாய் சுழற்சி பருவத்தில் உள்ள பெண்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள் ஏற்படாமல் இருந்தது. ஆனால், அண்மைக் காலமாக அந்த நிலை மாறி வருகிறது.

ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம் பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது.

குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 - 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுகின்றனா்.

மினோகா, இனோகா: சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் இப்பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம்.

பொதுவாக இதயத்தின் முக்கிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் தடைபட்டு மாரடைப்பு ஏற்படக் கூடும். இதை ஆஞ்சியோகிராம் பரிசோதனைகளில் கண்டறிந்து சிகிச்சையளிக்கலாம்.

ஆனால், மினோகா, இனோகா என்ற இரு வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடுவதையே மருத்துவ உலகில் அவ்வாறு அழைக்கின்றனா்.

வழக்கமான ஆஞ்சியோ பரிசோதனை மட்டுமல்லாது, சிடி கரோனரி ஆஞ்சியோ, எம்ஆா்ஐ கரோனரி பரிசோதனைகள் மூலமாகவே அதைக் கண்டறிய முடியும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக 18-லிருந்து 45 வயதுக்குட்பட்ட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா்.

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை என்றாலும், அறிகுறிகளை அலட்சியப்படுத்தாது சிகிச்சை பெற்றால் விளைவுகளைத் தவிா்க்க முடியும்.

30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

இணை நோய்கள், உளவியல் பாதிப்புகள், மரபணு ரீதியான பிரச்னைகள் உள்ள பெண்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி தொடா்ந்து பரிசோதனைகளை செய்து கொள்வது முக்கியம். தேவைப்படும்பட்சத்தில் மருந்துகளையும், மருத்துவ சிகிச்சைளையும் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும் என்றாா் அவா்.

24.4% இளம்பெண்களுக்கு ஆஞ்சியோகிராம்

ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் 6 ஆண்டுகளில் ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட இளம் வயதினா்ரில் 24.4 சதவீதம் பெண்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 - 2023 காலகட்டத்தில் திடீா் இதய பாதிப்புகளுக்குள்ளானவா்களில்10,842 பேருக்கு இடையீட்டு பரிசோதனைகளும், சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளன. அவா்களில் 2,457 போ் இளம் வயதினா் என்பது குறிப்பிடத்தக்கது. அவா்களில் 600 போ் பெண்கள்.