
மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக அட்டைக் கத்தி சுற்றுவதை நிறுத்துங்கள் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள் என்ற தலைப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர் ஒன்றை வெளியிட்டு வருகிறார்.
இன்று காலை எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ”மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவின் கையெழுத்து பிரச்சாரம் தமிழ்நாட்டில் ஒரு நகைப்புக்குரிய சர்க்கஸ் போன்று மாறிவிட்டது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹிந்தி திணிப்பை மையமாக வைத்து பிரசாரத்தில் ஈடுபட சவால் விடுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நாங்கள் நடத்தும் ஆன்லைன் கையெழுத்து பிரசார இயக்கத்தில் 36 மணிநேரத்துக்குள் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் கையெழுத்திட்டு, தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக முதல்வரான நீங்கள் அதிர்ச்சியடைந்தது வெளிப்படையாகத் தெரிகிறது. மேலும், பிரசாரத்துக்கு எதிரான உங்களின் கூச்சல்கள் எங்களுக்கு எந்த பாதிப்பையும் அளிக்காது.
ஆட்சியில் இருந்தபோதிலும், உங்களால் நீட் தேர்வுக்கு எதிராக ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்த முடியவில்லை, உங்களுக்கான இடத்தை அறிந்த உங்களின் தொண்டர்கள் துண்டுப்பிரசுரங்களை குப்பைத் தொட்டியில் வீசியதை நினைவில் கொள்ளுங்கள்.
மாயையான ஹிந்தி திணிப்புக்கு எதிராக அட்டைக் கத்தி சுற்றுவதை நிறுத்துங்கள். உங்களின் போலியான ஹிந்தி திணிப்பு நாடகம் ஏற்கெனவே அம்பலமாகிவிட்டது. நீங்கள் அதை உணராதது துரதிர்ஷ்டவசமானது” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.