
சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசு கையெழுத்திடவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் பேசியிருப்பது விவாவதப் பொருளாகியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழகத்துக்கான கல்வி நிதியை ஒதுக்குவோம் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கடந்த சில வாரங்களாக மத்திய பாஜக அரசுக்கும் மாநில திமுக அரசுக்கும் இடையே கடும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில், தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க திமுக கூட்டணியைச் சேர்ந்த தமிழக எம்பிக்கள் திட்டமிட்டிருந்தனர்.
மக்களவையில் நடந்தது என்ன?
தேசிய கல்விக் கொள்கை குறித்து மக்களவையில் இன்று பேசிய திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர், மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது எனத் தெரிவித்தனர்.
தொடர்ந்து, பதிலளித்து பேசிய மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ”பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு அரசு, கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது” என்று குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மேலும், அவர் பேசியதாவது:
“மார்ச் மாதம் முடிய இன்னும் சில நாள்கள் இருக்கிறது. மத்திய அரசும் தெளிவாகவே இருக்கிறது. தமிழக அரசுடன் கடந்த மாதங்களில் பல கட்ட விவாதங்களை நடத்தியிருக்கிறோம். அவர்கள் நிலைப்பாட்டை கடந்த ஒரு சில மாதங்களில் மாற்றியிருக்கிறார்கள். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது.
திமுக எம்பிக்கள் தமிழக கல்வித் துறை அமைச்சருடன் வந்து என்னை சந்தித்தனர். அப்போது ஒப்புதல் கொடுத்துவிட்டு சென்று, இப்போது பிரச்னையை ஏற்படுத்துகிறார்கள்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்கூட உதாரணமாக கர்நாடகத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மூலம் ஹிந்தி திணிக்கப்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு தவறானது.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாக என்னிடம் கூறிய நிலையில் நிலைப்பாட்டை மாற்றியது ஏன்? தேசியக் கல்விக் கொள்கை திட்டத்தில் கையெழுத்திட தமிழக முதல்வர் முன்வந்தார். ஆனால், சூப்பர் முதல்வர் அதனைத் தடுத்துவிட்டார். தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை தமிழக அரசு வஞ்சிப்பதாகவும் எந்த சூப்பர் முதல்வர் சொன்னதைக் கேட்டு, கையெழுத்திட மறுத்தனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் திமுக உறுப்பினர்கள் குறித்து பேசிய பிரதான், "திமுகவினர் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை" என்று பேசினார்.
இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.
இதையடுத்து, தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்
இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நாவடக்கம் வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“தன்னை மன்னரென எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் பேசும் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களுக்கு நாவடக்கம் வேண்டும்.
தமிழ்நாட்டின் நிதியைத் தராமல் ஏமாற்றும் நீங்கள் தமிழ்நாட்டு எம்.பி.க்களைப் பார்த்து அநாகரிகமானவர்கள் என்பதா?தமிழ்நாட்டு மக்களை அவமானப்படுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி இதனை ஏற்கிறாரா?
தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு அனுப்பிய பிஎம்ஸ்ரீ உடன்பாட்டை முற்றிலுமாக நிராகரித்து விட்டது என எனக்குக் கடிதம் எழுதியது நீங்கள் தானே?
நாங்கள் மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்துச் செயல்படுகிறோம். உங்களைப் போல நாக்பூரின் சொற்களுக்குக் கட்டுப்பட்டு அல்ல.
நாங்கள் உங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முன்வரவும் இல்லை, அப்படி முன்வராத என்னை யாரும் வற்புறுத்தவும் முடியாது.
தமிழ்நாட்டு மாணவர்களுக்குரிய நிதியை, எங்களிடம் இருந்து வசூல் செய்த வரியை விடுவிக்க முடியுமா? முடியாதா? என்பதற்கு மட்டும் பதில் கூறுங்கள்” என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
தமிழக கல்வி அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்
தமிழக கல்வி அமைச்சருடன் எம்பிக்கள் வந்து தன்னை சந்தித்ததாக பிரதான் கூறியதற்கு மகேஸ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
”அனைத்திலும் முதல் பரிசை பெறுவதால் தமிழ்நாட்டை ஓட விட மாட்டேன் என்கிறார்கள். அதனால்தான், மும்மொழி கொள்கை எனும் சங்கிலியை காலில் கட்டிவிட்டு ஓடு ஓடு எனக் கூறுகின்றனர்.
பிம் ஸ்ரீ திட்டம் தொடர்பாக குழு அமைத்த பிறகே முடிவு என கடிதத்தில் தெளிவாக கூறினோம். நாட்டின் நம்பர் ஒன் முதல்வராக ஸ்டாலின்தான் சூப்பர் முதல்வர்.
மத்திய அரசு நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
அண்ணாமலை கேள்வி
மத்திய அமைச்சர் குறித்து முதல்வர் ஸ்டாலினின் பதிவை பகிர்ந்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மூன்று கேள்விகளை எழுப்பியுள்ளார்.
”பதட்டத்தில் பிதற்றும் தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.
முதல் கேள்வி: திமுகவினர் நேர்மையற்ற, நாகரீகமற்றவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லியிருக்கிறார்.
இரண்டாவது கேள்வி: மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்களே, யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் நடத்தும் உங்கள் கட்சியினரும் அவர்கள் உறவினருமா?
மூன்றாவது கேள்வி: யார் அந்த சூப்பர் முதல்வர்? ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்துவிட்டது, முதல்வரே. இனியும் தமிழக மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் சூப்பர் முதல்வர் குறித்து தர்மேந்திர பிரதான் பேசிய நிலையில், அவரின் கருத்துக்கு எதிராக திமுக ஆதரவு கட்சிகளும், சூப்பர் முதல்வர் யார்? என்ற கேள்வியுடன் பாஜக கூட்டணிக் கட்சிகளும் விவாதத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.