
ரயில்வே பயணிகள் போர்வை - தலையணை உறைகளில் தமிழ் உள்பட 3 மொழிகளில் தகவல்களை அச்சிட தெற்கு ரயில்வே மதுரைக் கோட்டம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்பு ஹிந்தி, ஆங்கிலம் என இரு மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டுவந்த நிலையில், தற்போது தமிழிலும் அச்சிடப்படவுள்ளது.
மதுரை ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 13 ரயில்களில் உள்ள குளிர் சாதன வசதியுடைய பெட்டிகளில் கொடுக்கப்படும் போர்வை, தலையணை உறைகளில் இனி மும்மொழிகள் இருக்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்துக்கு ரயில்வே மதுரைக் கோட்டம் உத்தரவிட்டுள்ளது.
ரயில்களில் பயணிகள் வசதிக்காக இரு வெள்ளைப் போர்வைகள், தலையணைகள் வழங்கப்படும். இவற்றை பழுப்புநிற காகித உறைகளில் வைத்து வழங்குவது வழக்கம். இந்த உறைகளில் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மட்டுமே தகவல்கள் அச்சிடப்பட்டுவந்தன.
தமிழ்நாட்டில், அதுவும் தமிழ்நாட்டிற்குட்பட்ட நகரங்களுக்குள் இயங்கும் ரயில்களில் தமிழ் மொழி இடம்பெறாமல் பிற மொழிகளில் தகவல்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டதால் பயணிகள் பலர் அவதிக்குள்ளாகும் நிலையே நீடித்து வந்தது.
இதனிடையே தற்போது ரயில்வே போர்வை உறைகளில் தமிழ் மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது.
(சங்கம் வைத்து தமிழ் வளர்த்த) மதுரை கோட்ட ரயில்வே அச்சிட்டு வழங்கும் உறைகளில் கூட தமிழ் இடம்பெறவில்லை என்பது குறித்து கடந்த பொங்கல் பண்டிகையன்று தினமணி இணையதளப் பக்கத்தில் சிறப்புச் செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.
சிறப்புச் செய்திக்கு... கிளிக் செய்யவும் | ரயில்வேயின் காகித உறையில்கூட தமிழ் இல்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.