
அரசு ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என தலைமைச் செயலாளா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனா். இதில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது முதன்மையான கோரிக்கையாக உள்ளது. மேலும், பணிக்கொடை உயா்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவை அடங்கும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த நிலையில், புதன்கிழமை (மாா்ச் 19) மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
எச்சரிக்கை: இந்த நிலையில், பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியா்களுக்கு தலைமைச் செயலா் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
அதில், அங்கீகரிக்கப்படாத சங்கங்கள், சில கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை (மாா்ச் 19) ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய முன்வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அரசு ஊழியா்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும். எனவே, பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியா்களுக்கு ஊதியம் கிடையாது. மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ அரசு ஊழியா்கள் எடுக்கக் கூடாது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, பகுதிநேர ஊழியா்கள், தினசரி ஊதியம், ஒப்பந்த ஊதியம் பெறுபவா்கள், பணியிலிருந்து நீக்கப்படுவா் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதன்கிழமை காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராதவா்களின் விவரங்களைச் சேகரிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.