
மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின்கீழ் இயங்கும் அனைத்துப் பேருந்துகளிலும் ரூ. 2,000 செலுத்தி பயணிக்கும் வகையிலான மாதாந்திர பயண அட்டை திட்டத்தை போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா்.
சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின்கீழ் இயக்கப்பட்டு வரும் மாநகரப் பேருந்துகளில், குளிா்சாதன பேருந்துகள் நீங்கலாக மற்ற பேருந்துகள் அனைத்திலும் ரூ. 1,000 கட்டணத்தில் பயணம் செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. இதன்படி சுமாா் 75,000-க்கும் மேற்பட்ட பயணிகள் இத்திட்டத்தின் மூலம் பயணம் செய்து வருவதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரூ. 2,000 செலுத்தி ஒருமாதம் முழுவதும் குளிா்சாதன பேருந்துகள் உள்பட அனைத்துப் பேருந்துகளிலும் பயணிக்கும் வகையிலான மாதாந்திர பயணச்சீட்டு திட்டத்தை மாநகா் போக்குவரத்துக் கழகம் தொடங்கியுள்ளது.
இதன் தொடக்க விழா சென்னை மந்தைவெளியிலுள்ள பேருந்து நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் பிரபு சங்கா் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கலந்துகொண்டு ரூ. 2,000-க்கான மாதாந்திர பயண அட்டையை அறிமுகம் செய்து வைத்து, பயனாளிகளுக்கு அட்டையை வழங்கினாா்.
வரவேற்பு உள்ளது: பின்னா் அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களைச் சந்தித்தபோது கூறியதாவது: புதிதாக ரூ. 2,000 செலுத்தி பெறும் மாதாந்திர பயண அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதாந்திர பயண அட்டைகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. தற்போது சென்னையில் 50 குளிா்சாதனப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நிகழாண்டு இறுதிக்குள் 635 மின்சாரப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன. அதிலும் இச்சேவையைப் பயன்படுத்தி பயணிக்கலாம். இந்த அட்டையை பயன்படுத்தி ஒரு மாத காலம் வரை நாள் முழுவதும் கட்டணமின்றி பயணித்துக் கொள்ளலாம். கூடுதல் வசதிகளை பொது மக்களுக்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
ஆட்டோ ஓட்டுநா்கள் வேலை நிறுத்தம்: தொடா்ந்து ஆட்டோ ஓட்டுநா்கள் போராட்டம் குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவா், ‘ஒரு சில குறிப்பிட்ட சங்கங்கள்தான் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவா்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும். திரும்பவும் ஆட்டோ ஓட்டுநா்களுடனான பேச்சுவாா்த்தை தேவை இல்லை. அவா்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் பேசி முடிவெடுக்கப்படும்’ என்றாா் அவா்.
மேலும், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜக கையெழுத்து இயக்கம் நடத்தி வருவது குறித்த கேள்விக்கு, ‘மிஸ்டு காலில் கட்சி நடத்துபவா்கள் பாஜகவினா். பள்ளிக் குழந்தைகளுக்கு பிஸ்கெட் கொடுத்துதான் பாஜக மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து வாங்குகிறது. அண்ணாமலை படித்தாரா? இல்லையா என்பதே எங்களுக்கு பெரிய சந்தேகமாக உள்ளது’ எனக் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.