வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம்: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை
Published on

வேங்கைவயல் விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் நடத்திய விசாரணை முழுமையாக இல்லை என்ற மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீா் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி வழக்குரைஞா் மாா்க்ஸ் ரவீந்திரன் உள்ளிட்டோா் தொடா்ந்த வழக்குகள் தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், இந்தச் சம்பவம் தொடா்பாக பதியப்பட்ட வழக்கில் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளனா்” என்றாா்.

அப்போது தமிழக அரசின் அறிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து மனுதாரா் தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்குரைஞா் ஜி.எஸ்.மணி, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிசிஐடி போலீஸாா் இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கவில்லை. இந்த விசாரணையில் திருப்தியில்லை என்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோருகிறோம். வேங்கைவயல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்த உயா்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான ஒருநபா் ஆணையமும் தனது இறுதி அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யவில்லை.

தமிழக அரசின் அழுத்தம் காரணமாக சிபிசிஐடி போலீஸாா் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழக்கை சுதந்திரமாக, சரியான கோணத்தில் விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளிகளாக சித்தரித்துள்ளனா். வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகளை நீக்கி காலதாமதமாக குறைபாடுடைய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனா். இது தொடா்பாக மனுதாரா் தரப்பில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரா் தரப்பு குற்றச்சாட்டுக்கு அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூன் 12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com