ராமேசுவரம்: தாயகம் திரும்பும் இலங்கை அகதிகள்! உதவிகேட்டு மத்திய அரசிடம் கோரிக்கை

தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிடம் இலங்கை தமிழ் அகதிகள் கோரிக்கை
இலங்கை அகதிகள் (கோப்புப் படம்)
இலங்கை அகதிகள் (கோப்புப் படம்)AP
Published on
Updated on
1 min read

ராமேசுவரத்தில் உள்ள இலங்கை தமிழ் அகதிகள் நாடுதிரும்ப உதவுமாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள், மீண்டும் தாயகம் திரும்ப உதவுமாறு மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையில் 2019 ஆம் ஆண்டிலிருந்து கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. 2010 ஆம் ஆண்டில் கடுமையாக உயர்ந்த வெளிநாட்டுக் கடன், 2019-ல் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 88 சதவிகித்தை எட்டியது. தொடர்ந்து, கரோனா தொற்றுக்காலமும் உருவாகியதுடன், உலகளாவிய மந்த நிலையால், இலங்கை பொருளாதாரம் மேலும் சிக்கலுக்கு ஆளானது. இதன் காரணமாக, 2021 ஆம் ஆண்டில் நாட்டின் வெளிநாட்டு கடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 101 சதவிகிதமாக உயர்ந்தது.

இதன் எதிரொலியாக உணவு, எரிபொருள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பரவலான பற்றாக்குறைக்கு வழிவகுத்தது. வணிகங்கள், வாழ்வாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், அவசர பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நிவாரணம்கோரி அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனிடையே, வாழ்வாதாரம் தேடி, இலங்கையைச் சேர்ந்த சில தமிழ்க் குடும்பங்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தன. 2022 முதல், 96 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆண்கள், 95 பெண்கள், 58 சிறுவர்கள், 57 சிறுமிகள் உள்பட மொத்தம் 315 இலங்கைத் தமிழர்கள் பதிவு செய்யப்படாத படகுகள் மூலம் ராமேசுவரத்திற்கு வந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ராமேசுவரத்தில் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. இருப்பினும், அவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து அதிகாரபூர்வ அகதி அந்தஸ்து இல்லாததால், அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகல் குறைவாகவே உள்ளது.

உரிய அங்கீகாரமும் நிதியுதவியும் இல்லாததால், அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதில் பெரும் சவாலாக உள்ளது. வருமானம் ஏதுமில்லாமல், கைதிகள்போல அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனிடையே, இலங்கையைவிட்டுச் சென்றவர்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், மீண்டும் தாயகம் திரும்ப அனுமதிக்கப்படுவதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனையடுத்து, தங்களை தாயகம் திருப்பி அனுப்பும் செயல்முறையில் தீவிரம் காட்டுமாறு மத்திய, மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com