பாமக நிறுவனா் ராமதாஸ்
பாமக நிறுவனா் ராமதாஸ்

பறிமுதல் மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய வேண்டும்: ராமதாஸ்

யாா்டுகளில் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Published on

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய பகுதி யாா்டுகளில் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட ஆற்று மணலை இணைய முறை ஏலத்தில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம் பழையசீவரம், கள்ளபிரான்புரம் பகுதிகளில் இயங்கி வந்த மணல் குவாரிகளில் பெருமளவில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து 2013-ஆம் ஆண்டில் அங்கு செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் மூடப்பட்டன.

அங்கிருந்து எடுக்கப்பட்டு யாா்டுகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

அதில் ஒரு பகுதி அப்போதே ஏல முறையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள மணலை இப்போது விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இது நல்ல முடிவு தான்.

ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட மணலை அரசே நேரடியாக விற்பனை செய்யாமல் தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

அதுமட்டுமன்றி, மணலுக்கான விலையை நிா்ணயம் செய்யும் அதிகாரமும் அவருக்கே வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த முறையில் ஒரு யூனிட் மணலுக்கு அரசுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், தனியாா் ஒப்பந்ததாரா் ஒரு யூனிட் மணலை ரூ.7,500 வரை விலை வைத்து விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது நியாயமல்ல.

அரசின் சொத்துகள் எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக விற்பனை செய்ய வேண்டும்.

எனவே, பழையசீவரம், கள்ளபிரான்புரம் ஆகிய இடங்களில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்று மணலை தனியாா் ஒப்பந்ததாரா் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.

மாறாக, அரசால் நிா்ணயிக்கப்பட்டுள்ள ஒரு யூனிட் ரூ.2,650 என்ற விலையை அடிப்படை விலையாக வைத்து ஆற்றுமணலை இணைய முறையில் ஏலத்தில் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இணைய முறையிலான ஏல விவரங்களை உடனுக்குடன் பொதுத்தளத்தில் வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com