ஒரு மணி நேரம்தான்... திருச்சி - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானச் சேவை!

திருச்சி - யாழ்ப்பாணம் விமானச் சேவை குறித்து...
திருச்சி - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானச்  சேவை.
திருச்சி - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமானச் சேவை.
Published on
Updated on
1 min read

திருச்சிராப்பள்ளி: தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி (திருச்சி) மற்றும் இலங்கையின் யாழ்ப்பாணம் இடையே 47 ஆண்டுகளுக்குப் பின்னர் நேரடி விமானச் சேவை நேற்று(மார்ச் 30) தொடங்கப்பட்டது.

இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றதால் தமிழர்களின் பூர்வீக பூமியான யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையம், இலங்கை ராணுவத்துக்கான விமானத் தளமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

இலங்கையில் 2009-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் பலாலி விமானத் தளமும் சீரமைக்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பலாலியில் முகாமிட்டிருந்த இலங்கை ராணுவம் வெளியேற்றப்பட்டு பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

அப்போது, இந்தியாவின் நிதி உதவியுடன் பலாலி விமான நிலையம் முழுமையாக சீரமைக்கப்பட்டது. பின்னர் இது பலாலி சர்வதேச விமான நிலையமாகவும் புத்துயிர் பெற்றது. 2019-ம் ஆண்டு யாழ்ப்பாணம் விமானச் சேவைகளுக்காக திறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு பயணிகள் விமானம் இயக்கப்பட்டன. கரோனாவுக்குப் பிந்தைய காலத்தில் சென்னை- யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு நாள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக தமிழ்நாட்டின் திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் யாழ்ப்பாணத்துக்கு விமானச் சேவைகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் ஒரு பகுதியாகவே நேற்றுமுதல் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானச் சேவை தொடங்கப்பட்டது.

திருச்சியில் இருந்து பிற்பகல் 1.25 மணிக்கு புறப்படும் விமானம், ஒரு மணிநேரத்தில் பிற்பகல் 2.25 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையும். யாழ்ப்பாணத்தில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.05 மணிக்கு திருச்சிக்கு வந்து சேரும்.

இண்டிகோ (Indigo) நிறுவனம் இந்த விமானச் சேவையை இயக்குகிறது. 47 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு விமானச் சேவை இயக்கப்படுவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இதுவரை திருச்சியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்குதான் நாள்தோறும் 2 விமானங்கள் இயக்கப்பட்டன. திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் இந்த விமானச் சேவைகளை பயன்படுத்தி வந்தனர். இதற்கு அதிகமான கட்டணமும் செலுத்தி வந்தனர்.

தற்போது யாழ்ப்பாணத்துக்கு திருச்சியில் இருந்து விமானம் இயக்கப்படுவதால் குறைவான கட்டணத்தில் இலங்கையை சென்றடைய வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல, தமிழ்நாட்டில் இருந்து உணவுப் பொருள்களை இலங்கை தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்கவும் முடியும்.

திருச்சி- யாழ்ப்பாணம் இடையேயான விமான கட்டணமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம் செல்ல மட்டும் ரூ. 5,900 முதல் ரூ. 6,400 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இதையும் படிக்க: தங்கம் விலை புதிய உச்சம்: சவரன் ரூ.67,000-ஐ தாண்டியது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com