பிளஸ் 2: தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவி தேர்ச்சி!

தேர்வில் தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயத்தால் தற்கொலை செய்த தஞ்சை மாணவி தேர்ச்சி பெற்றுள்ளார்.
சோகத்தில் மாணவி குடும்பத்தினர்.. உள்படம் மாணவி ஆர்த்திகா
சோகத்தில் மாணவி குடும்பத்தினர்.. உள்படம் மாணவி ஆர்த்திகா
Published on
Updated on
1 min read

பாபநாசம்: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் படுகை புதுத்தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. ஆட்டோ ஓட்டுநர். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள். இவர்களில் 2 ஆவது மகள் ஆர்த்திகா (17). பாபநாசம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த இவர் நடந்து முடிந்த அரசு பொதுத் தேர்வை எழுதினார். அதிலிருந்து சரியாக தேர்வு எழுதவில்லை என பெற்றோரிடம் அடிக்கடி புலம்பி வந்தார்.

இந்நிலையில் தேர்வில் தான் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் ஆர்த்திகா புதன்கிழமை காலை 7 மணி அளவில் வீட்டின் பின்புறத்தில் உள்ள மாட்டுக்கொட்டகைக்குச் சென்று தனது சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஆர்த்திகா தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்த பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து பாபநாசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு முடிவு வியாழக்கிழமை காலை வெளியான நிலையில், அதில் ஆர்த்திகா ஒவ்வொரு பாடத்திலும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது தெரிய வந்தது.

தமிழில் -72, ஆங்கிலத்தில் - 48, இயற்பியலில் - 65, வேதியியலில் -78, விலங்கியல் - 80, தாவரவியலில் 70 என மொத்தம் 413 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மாணவி ஆர்த்திகா தேர்வில் வெற்றி பெற்றதைக் கண்டு பெற்றோர்களும், உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

ஆர்த்திகாவின் தாயார் தமிழ்ச்செல்வி கூறுகையில், என்னுடைய மகள் நன்றாக படிக்கக் கூடியவள். ஆங்கிலத்தில் சரியாக எழுதவில்லை எனக் கூறி வந்தார். இந்நிலையில் அனைத்து பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற்று 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். எனது மகள் இறந்தது பேரிழப்பாகும் என்றார் அவர்.

எந்த ஒரு மாணவியும் இது போன்ற முடிவை எடுக்கக் கூடாது என உறவினர்களும் வேதனையுடன் தெரிவித்தனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com