
சென்னை : கடுமையான கோடைக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. வட தமிழகம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்மாவட்டங்களில் இன்று முதல் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
வானிலை நிலவரங்களை கணித்து சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் பிரதீப் ஜான்.
இன்று அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் மிகத் தனித்துவமான ஆண்டாக இது மாறியிருக்கிறது. இந்த ஆண்டு இதுவரை தமிழகத்தில் வெப்ப அலை ஏற்படவில்லை. சென்னையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை எட்டவில்லை. அதுவும் ஒரு மே மாதத்தில் சென்னையில் வெப்பநிலை ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸை தொடவில்லை. இது கடந்த 2022, 2018, 2004 என கடந்த 25 ஆண்டுகளில் மூன்று முறை நடந்தது போல தற்போது 2025ல் நிகழ்ந்துள்ளது.
வழக்கமாக, வங்கக் கடலில், மிகப்பெரிய காற்று சுழற்சி எல்லாம் மே இறுதியில்தான் ஏற்படும். முதல் முறையாக தற்போது மே மத்தியிலேயே உருவாகியிருக்கிறது. இந்த சுழற்சிகள் மெல்ல காற்றழுத்தமாக மாறும் வாய்ப்பிருப்பதால், மே இறுதிக்குள் இப்பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகலாம். அரபிக் கடலிலும் 10 நாள்களில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகலாம்.
இந்த காற்று சுழற்சியானது வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இன்னும் நெருங்கிவிடும். இதனால் மிகச் சிறப்பாக நாள்கள் காத்திருக்கின்றன.
இன்று மழைப்பொழிவு
கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, காரைக்கால், நாகை, தஞ்சை, பெரம்பலூர், திருச்சி, தருமபுரி, திருப்பத்தூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
பெங்களூருவுக்கு மீண்டும் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது.
கோடை வெய்யில் குறைந்திருக்கும் நாள்களைக் கொண்டாடுங்கள். அதற்காக குளுகுளுவென இருக்காது. வழக்கமான வெய்யிலைக் காட்டிலும் குறைவாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.