
திருவோணம் அருகே கிடங்கில் நாட்டு வெடி வெடித்ததில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு காவல் சரக்கத்திற்குட்பட்ட திருவோணம் வட்டம், நெய்வேலி தென்பாதியில் ஞாயிற்றுக்கிழமை கிடங்கில் வைத்திருந்த பட்டாசு (நாட்டு வெடி) வெடித்து அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராஜன் (65), ரியாஸ் (19) ஆகிய 2 பேர் பலியானார்கள். நாட்டு வெடி தயார் செய்த கிடங்கு அனுமதியின்றி இயங்கியதா? என்ற கோணத்தில் வாட்டாத்திக்கோட்டை போலீஸார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
பலியான சுந்தர்ராஜன் மற்றும் ரியாஸ் சடலங்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவலறிந்த பேராவூரணி எம்.எல்.ஏ அசோக்குமார், ஒரத்தநாடு டி.எஸ்.பி கார்த்திகேயன் உள்ளிட்டோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராம் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதனைத்தொடர்ந்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருவிழாவிற்காக அனுமதியின்றி நாட்டு வெடிகள் தயார் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வருவாய்த்துறை, காவல்துறை மூலம் உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.