
ஈ.டி.(அமலாக்கத்துறை)க்கு மட்டுமல்ல, மோடிக்கும் பயப்படமாட்டோம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் ரூ. 1,000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி அமலாக்கத் துறை, டாஸ்மாக் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது. தொடர்ந்து, டாஸ்மாக் புகாரில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அமலாக்கத்துறை சோதனைக்குப் பயந்துதான் முதல்வர் தில்லி சென்று பிரதமரைச் சந்திக்கிறார் என்று பேசப்பட்ட நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு பதிலளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை அரசுத் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு அவர் அளித்த பேட்டி:
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உள்விளையாட்டரங்கம் கட்டுமானப் பணி நிதிச் சிக்கல் காரணமாக நின்று போனது. பணிகளை விரைந்து முடிக்க ரூ. 3.50 கோடி ஒதுக்கியுள்ளார். மேலும் தேவைப்படும் ரூ. 1 கோடியை இங்குள்ள எம்பி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெறப்பட்டு, வரும் டிசம்பருக்குள் பணியை முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் மாநிலத்தின் நிதி உரிமையைக் கேட்டுப் பெறுவதற்காக தில்லி சென்றுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதை வைத்து அரசியல் செய்கிறார்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்குப் பயந்து சென்றுள்ளதாக சொல்கிறார்கள். ஈ.டி.(அமலாக்கத்துறை) அல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம். இதனைப் பல முறை சொல்லியிருக்கிறோம். தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டே இருப்போம்.
மிரட்ட முயற்சித்தார்கள். மிரட்டி அடிபணிய வைப்பதற்கு அடிமை கட்சியல்ல திமுக. முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கிய கட்சி. சுயமரியாதை கட்சி. பெரியார் கொள்கைகள் கொண்ட கட்சி. தப்பு செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டும். நாங்கள் யாருக்கும் பயப்பட தேவையில்லை. யாருக்கும் அடிபணியத் தேவையில்லை. எதுவாக இருந்தாலும் சட்டப்படி நாங்கள் சந்திப்போம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.