முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல: விஜய்

முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on
Updated on
2 min read

முதல்வர் தில்லி சென்றது மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், மாநிலத்தை ஆளுகின்ற ஊழல் கபடதாரி தி.மு.க. அரசியல் எதிரி என்றும், ஒன்றியத்தை ஆளுகின்ற பிளவுவாத பா.ஜ.க. கொள்கை எதிரி என்றும் தீர்க்கமாக அறிவித்திருந்தோம். ஆட்சியில் இருக்கும் இவ்விரு கட்சிகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து சுட்டிக் காட்டியும் வருகிறோம்.

அ.தி.மு.க. பா.ஜ.க. இடையே பழைய கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்ட போதே, தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் உள்ள மறைமுகக் கூட்டணி பற்றியும் நாம் தெரிவித்திருந்தோம். அதே போல், ஊழல் செய்தவர் மீது நடவடிக்கை பாயும்போது, உடனடியாக அவர் தில்லிக்குப் பயணம் மேற்கொண்டால், அவர் எந்த ஊழலையும் செய்யாதவர் போல அனைத்தும் மறைக்கப்படும் என்பதையும் தெரிவித்திருந்தோம். அதையும் நிரூபிப்பது போலவே அமைச்சர்கள் பலரைத் தொடர்ந்து தற்போதைய தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினின் தில்லிப் பயணம் அமைந்துள்ளது.

டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை நடத்திய ரெய்டைத் தொடர்ந்து, சமீபத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் மற்றும் தி.மு.க. தலைமையின் குடும்ப உறுப்பினர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

இதற்கிடையே, டாஸ்மாக் மீதான அமலாக்கத் துறை விசாரணைக்குத் தடை கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து, இடைக்காலத் தடையையும் வாங்கியது. எனினும், இது நிரந்தரத் தடையல்ல என்பதால், எங்கே பேசினால் விசாரணை தடுத்து நிறுத்தப்படுமோ, அங்கே பேசியாக வேண்டிய சூழ்நிலைக்கு, வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தள்ளப்பட்டார். அதற்கேற்றாற்போல அமைந்ததுதான் நீதி ஆயோக் கூட்டம்.

எதிர்க்கட்சியாக இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன் விடுவதும், ஆளும்கட்சியாக இருக்கும்போது கைகுலுக்குவதும்தான் இந்த கபட நாடக தி.மு.க. தலைமையின் பித்தலாட்ட அரசியல். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின், திடீரென இந்த வருடம் மட்டும் செல்ல வேண்டிய அவசியம் என்ன? இது, மாநிலத்திற்கான நிதியைப் பெறுவதற்காக அல்ல. தன்னுடைய குடும்ப வாரிசு நிதியைக் காப்பாற்ற மட்டுமே என்பது சாமானிய மக்கள் நன்கு அறிந்ததே.

எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மன்றத்தில் தோல்வி உறுதி என்பது தி.மு.க.வுக்குத் தெரிந்துவிட்டது. அதனால் நேர்முகக் கூட்டு, மறைமுகக் கூட்டணி என்று, ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவிற்குச் சாமரம் வீசியாவது இனி காலத்தை ஓட்டித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறது. இப்படி இறுமாப்புக் கணக்குகளைப் போடுபவர்களுக்கு எம் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடத்தைப் புகட்டத் தயாராகிவிட்டார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

அப்துல் கலாம் கதையைப் படமாக்குவது சவாலானது: ஓம் ராவத்

குறிப்பாக, வருங்காலத்தில் பிளவுவாத பா.ஜ.க.வுடன் நேரடிக் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவில் தமிழ்நாட்டைச் சுரண்டிக் கொள்ளை அடித்து, அவர்களிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துள்ளது. இந்த அவலமான தி.மு.க அரசின் ஊழல் பெருச்சாளிகள் அனைவரும் தமிழ்நாட்டு மக்களால் தோற்கடிக்கப்பட்டு, அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு தமிழக வெற்றிக் கழகம் உண்மையான மக்களாட்சியை அமைக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com