பயமில்லை என்று கூறியவர் வெளிநாடு தப்பிச் சென்றது ஏன்? இபிஎஸ் கேள்வி!

எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி தொடர்பாக...
எடப்பாடி கே. பழனிசாமி  செய்தியாளர் சந்திப்பு.
எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு.
Published on
Updated on
2 min read

இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார் என்று அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர், திமுக அரசின் நீதி ஆயோக் அணுகுமுறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, டாஸ்மாக் ஊழல் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நீதி ஆயோக் புறக்கணிப்பு: இரட்டை வேடம் போடும் திமுக?

"தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறும் ஸ்டாலின், நீதி ஆயோக் கூட்டங்களை மூன்று ஆண்டுகளாகப் புறக்கணித்தார். தற்போது திடீரென அதில் பங்கேற்றுள்ளார். ஏன் மூன்று ஆண்டுகள் பங்கேற்கவில்லை? மூன்றாண்டுகள் பங்கேற்றிருந்தால் தமிழக நலன்களுக்காகத் திட்டங்களைப் பெற்றிருக்கலாம் அல்லவா?" என்று எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

மேலும், "டாஸ்மாக்கில் ஊழல் நடைபெற்று, அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. அதற்காகத்தான் முதல்வர் ஸ்டாலின் நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் என்று சொல்லத் தோன்றுகிறது. மக்கள் பிரச்னைக்கு இதுவரை செல்லாமல் தற்போது ஏன் சென்றுள்ளார்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி, தமிழகத்திற்கு வரும்போது கருப்பு பலூன் காட்டிய ஸ்டாலின், தற்போது வெள்ளைக்கொடி பிடிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார். "எதிர்க்கட்சியாக ஒரு நிலைப்பாடு, ஆளும் கட்சியாக வந்தபோது ஒரு நிலைப்பாடு. இரட்டை வேடம் போடும் கட்சி திமுக" என்று கூறினார்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடு: அரக்கோணம் சம்பவம் சாட்சி!

"திமுக அரசு வந்த பிறகு பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் பாதுகாப்பு இல்லை என நான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறேன். ஆனால் இதுவரை தரமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு மோசமாகவே இருந்து வருகிறது" என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

அரக்கோணத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலையைக் குறிப்பிட்ட அவர், "அந்தப் பெண் கொடுத்த புகாரை உடனடியாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஆணை பிறப்பித்தும், புகார் காலதாமதமாகவே முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்படுகிறது.

பின்னர் புகார் கொடுத்த நபர் ஜாமீனில் வெளிவருகிறார். ஆனால், அந்தப் பெண் கொடுத்த புகார் பொதுவெளிகளில் வெளியே வந்துள்ளது. இதெல்லாம் வெளியே வரக்கூடாது என்பதுதான் சட்டம். ஆளுநரிடம் புகார் அளிக்க சென்ற அந்தப் பெண்ணை ஆளுநரை சந்திக்க விடாமல் தமிழக காவல்துறை தடுத்துள்ளது. எவ்வளவு அலங்கோலமான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு அரக்கோணமே சாட்சி" என்று வேதனை தெரிவித்தார்.

போதைப்பொருள் நடமாட்டம்: இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்றவர் ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார்?

"இடியைக் கண்டாலும் பயம் இல்லை என்று கூறிய உதயநிதி ஸ்டாலினுடைய தம்பி(ஆகாஷ் பாஸ்கரன்) ஏன் வெளிநாடு தப்பிச் சென்றார்? அதற்கான காரணங்கள் இனிமேல் வரும். இதுதான் ஆரம்ப கட்டம். இனிமேல் எப்படி பயப்படுகிறார் என்பது இனிமேல் தெரிய வரும்" என்று அவர் கிண்டலாகப் பேசினார்.

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், அதனைத் தடுக்கவும் முற்றிலும் ஒழிக்கவும் தொடர்ந்து சட்டப்பேரவையில் குரல் கொடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: அம்பேத்கர் திடலில் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை அமைக்கக் கூடாது: சீமான்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com