கட்சியைக் கைப்பற்றுகிறாரா அன்புமணி? பெரும்பாலான மாவட்ட செயலர்கள் வருகை!

அன்புமணி ராமதாஸ் அழைப்பை ஏற்று பெரும்பாலான நிர்வாகிகள் வருகை தந்திருப்பது பற்றி...
anbumani ramadoss photo
மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் (கோப்புப்படம்)படம்: எக்ஸ் /அன்புமணி
Published on
Updated on
1 min read

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி அழைப்பை ஏற்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு வருகை தந்துள்ளனர்.

அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் அடுக்கடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த மறுநாளே, தனது பலத்தைக் காட்டும் வகையில் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை அன்புமணி கூட்டியுள்ளார்.

கட்சிக்குள் பிளவு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மகள்வழிப் பேரனான முகுந்தன் பரசுராமன், 2024, டிசம்பர் 28-ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்ற கட்சியின் புத்தாண்டு பொதுக் குழுக் கூட்டத்தில் பாமக இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த அறிவிப்பை ராமதாஸ் வெளியிட்டபோது, மேடையில் இருந்த அன்புமணி ராமதாஸ் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் நியமிக்கப்பட்டது முதல் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து மோதல்கள் இருந்து வந்தன.

அதன் ஒருபகுதியாக, அண்மையில், அன்புமணியை கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கி செயல் தலைவராக அறிவித்த ராமதாஸ், பாமக தலைவராக தானே செயல்படப்போவதாகவும் அறிவித்தார். அதன் பிறகு ராமதாஸ் நடத்திய கூட்டங்களை அன்புமணி தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.

கடந்தவாரம், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தபோது அன்புமணி ராமதாஸ், என்னை ஏன் பதவியிலிருந்து இறக்கினார்கள், நான் என்ன தவறு செய்தேன்? என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், ”அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தவறு செய்துவிட்டேன். கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து பல தவறுகளை அன்புமணி செய்துள்ளார். செயல் தலைவர் பதவியை ஏற்று அன்புமணி செயல்படுவது மட்டுமே தற்போதைய பிரச்னைக்கு முழுமையான தீர்வு” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அன்புமணிக்கு ஆதரவு?

சென்னை சோழிங்கநல்லூரில் இன்றுமுதல் 3 நாள்களுக்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தவுள்ளதாக நேற்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல் நாள் கூட்டத்துக்கு மொத்தம் 23 மாவட்டங்களின் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்த நிலையில், 22 பேர் வருகை தந்திருக்கிறார்கள்.

உட்கட்சி விவகாரம், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆதரவாளர்களுடன் அன்புமணி முக்கிய ஆலோசனையில் ஈடுபடப் போவதாகவும், இந்த கூட்டத்துக்கு பிறகு தனது நிலைபாட்டை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக நேற்று செய்தியாளர்களுடன் ராமதாஸ் பேசுகையில், ”நான் 108 மாவட்ட செயலாளர்களை ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்தேன், ஆனால் 8 பேர் மட்டுமே வருகை தந்தனர். அப்போதே செத்துவிட்டேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அன்புமணியின் அழைப்பை ஏற்று பெரும்பான்மையான மாவட்ட செயலர்கள் வருகை தந்திருப்பது கட்சிக்குள் அவருக்கான பலத்தை காட்டும் வகையில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com