அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
O. Panneerselvam
ஓ.பன்னீர்செல்வம்(கோப்புப்படம்)
Published on
Updated on
2 min read

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கான கட்டணத்தை உயர்த்தும் முடிவினை கைவிட வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் செய்பவர்கள் பெரும்பாலும் தினக் கூலி அடிப்படையில் வேலை செய்பவர்கள், பூ விற்பனை செய்பவர்கள், காய்கறி பழ வியாபாரம் செய்பவர்கள் போன்ற ஏழையெளிய மக்கள்தான். வீட்டு வாடகை உயர்வு, மின் கட்டண உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றின் காரணமாக இந்த ஏழையெளிய மக்கள் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்ற நிலையில், பேருந்துக் கட்டணத்தை உயர்த்த தி.மு.க. அரசு முடிவெடுத்து இருப்பது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள எட்டு அரசு போக்குவரத்துக் கழகங்களில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இருந்தாலும், பெரும்பாலான பேருந்துகள் ஒட்டுவதற்கே பயனற்றதாக உள்ளன. கடந்த நான்கு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில், உயிரைப் பணயம் வைத்து பயணிக்கக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை பொதுமக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது.

2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் அரசுப் பேருந்தின் படிக்கட்டில் உள்ள இருக்கை திடீரென்று பெயர்ந்து விழுந்ததன் காரமணமாக ஒரு பெண் பயணி சாலையில் தூக்கி வீசப்பட்டது; 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வள்ளலார் நகர் முதல் திருவேற்காடு வரை செல்லும் அரசுப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணி பேருந்திலிருந்து இறங்குவதற்காக இருக்கையிலிருந்து எழுந்தபோது, இருக்கையின் அடிச்சட்டம் உடைந்ததன் விளைவாக பேருந்துக்கு அடியில் விழுந்தது; 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில், ஓடிக் கொண்டிருந்த அரசுப் பேருந்தின் படிக்கட்டு திடீரென உடைந்து கீழே விழுந்தது; 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கே.கே. நகரை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பயணியர் இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்த நடத்துநரின் இருக்கை திடீரென்று கழன்று படிக்கட்டு வழியாக வெளியே விழுந்ததன் விளைவாக பேருந்தின் நடத்துநருக்கு படுகாயம் ஏற்பட்டது என பல உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். இதுதான் தமிழ்நாடு அரசால் இயக்கப்படும் பேருந்துகளின் நிலைமை. இந்தப் பேருந்துகளுக்கு கட்டண உயர்வு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடிய ஏபிடி! வைரல் விடியோ!

அரசுப் பேருந்துகள் இப்படிப்பட்ட நிலையில் இயங்குகின்ற சூழ்நிலையில், ஏழையெளிய மக்கள் பல்வேறு நிதிச் சுமைகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், புறநகர் இரயில்களுக்கான கட்டணத்தை ஒப்பிடும்போது பேருந்துகளின் கட்டணம் மிக அதிகமாக உள்ள நிலையில், அரசுப் பேருந்துகளுக்கான கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள், நுகர்வோர் அமைப்புகளின் கருத்தை கேட்க அரசு முடிவெடுத்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த முடிவை உடனடியாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதல்வரை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com