
ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் சக்கர நாற்காலியில் அமர்ந்து மாற்றுத் திறன் கொண்ட கிரிக்கெட் விளையாடி விடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.
நடப்பு ஐபில் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. இறுதிப் போட்டிக்கு முந்தையச் சுற்று ஆட்டமான குவாலிஃபையர் 2-ல் மும்பை மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில், ஆர்சிபி அணிக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவில் முகாமிட்டுள்ள முன்னாள் தென்னாப்பிரிக்க அணி கேப்டனும் முன்னாள் ஆர்சிபி வீரருமான ஏபிடி வில்லியர்ஸ் மரைன் லைன்ஸ் இஸ்லாம் ஜிம்கானாவில் மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறன் வீரர்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து கிரிக்கெட் விளையாடியது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சிறந்த விளையாட்டுத் திறனை வெளிப்படுத்திய ஏபிடி வில்லியர்ஸ், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே சில நேர்த்தியான ஷார்ட்களையும் விளாசினார். மேலும், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே விரைந்து ரன்களையும் எடுத்தார்.
அவரின் வருகையால் அங்கிருந்த மாற்றுத் திறன் கொண்ட வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்தப் புகைப்படங்கள் மற்றும் விடியோக்களைப் பகிர்ந்து ‘சிறந்த கிரிக்கெட் வீரருக்கான இலக்கணமாக ஏபிடி திகழ்வதாக’ ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
இந்தப் பயிற்சி ஆட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சக ஆர்சிபி வீரர் விராட் கோலி குறித்து ஏபிடி வில்லியர்ஸ் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். என்னால் ஆர்சிபி அணிக்காக விளையாடியதை நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. விராட் கோலி இன்னும் ஓரிரு ஆண்டுகளை விளையாடுவார் என்று எதிர்பார்க்கலாம். ஒருவேளை 5 ஆண்டுகளாகக் கூட இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிக்க: அதிர்ஷ்டம் ஆர்சிபி பக்கம் இருக்குமா? ஏபிடி வில்லியர்ஸ் கூறுவதென்ன?!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.