

ஈரோடு: திமுகவின் பி டீம் என என்னை குற்றம் சாட்டும் எடப்பாடி பழனிசாமிதான் கோடநாடு வழக்கில் ஏ1 என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், எம்.ஜி.ஆர். அவர்களுடன் சேர்ந்து செயல்வீரராகப் பணியாற்றியவன் நான். பின்னர் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களின் வழியில் இரவு பகல், நேரம் பாராமல் உழைத்தேன். இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அயராது தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றினேன். அம்மாவின் மறைவிற்குப் பிறகு இயக்கம் உடையாதிருக்க இரு முறை வாய்ப்பு இருந்தபோதும் விட்டுக் கொடுத்தேன். ஆனால், எடப்பாடி பழனிசாமி என்னை நீக்கியுள்ளார். அவரின் தலைமையில் எந்த வெற்றியும் எட்டப்படவில்லை.
இயக்கம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதற்காக சசிகலா அம்மாவிடம் பேசி பரிந்துரை கடிதத்தை அளித்தது உண்மை. ஆனால், இன்று அதற்காகவே தண்டனைக்கு உள்ளாகிறேன்.நேற்றைய தினம் தேவர் ஜெயந்திக்கு சென்றபோது எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக தான் அனைவரிடமும் பேசினேன். நீக்கப்பட்டவர்களிடம் பேசியது உண்மைதான். இயக்கத்தில் சேர்ந்து இயக்கத்தை வலிமைப்படுத்த வேண்டுமென பேசினேன்.
தேவர் திருமகனாரின் குரு பூஜையில் கலந்து கொண்டு வணங்கியதற்கு கிடைத்த பரிசுதான் என்னை இந்த இயக்கத்தில் இருந்து நீக்கியது என நான் கருதுகிறேன்.
நான் திமுகவின் ‘பி டீம்’ அல்ல கோடநாடு கொலை வழக்கில் ஏ1 என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். கட்சி விதியின்படி என்னை நீக்குவதற்கு முன்பு ஒரு கடிதம் அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும். அவர் சர்வாதிகாரர் போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்று நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் அல்ல தற்காலிக பொதுச் செயலாளர் தான். நான்காண்டு காலம் நம்மை கட்டிக்காத்து ஆட்சியில் அமர்த்திய பாரதிய ஜனதா கட்சிக்கு என்ன செய்தோம்.
2024, 2026, 2029 இந்த காலத்திலும் பாரத ஜனதா கட்சியின் கூட்டணி இல்லை எனக் கூறியவர். அவர் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊரிலும் ஒரு பேச்சை பேசுகிறார். என்னை பொறுத்தவரை துரோகம் என்று சொன்னால் அதற்கு நோபல் பரிசு அவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி கூறுகிறேன். அவர் அடிக்கடி திமுகவை பார்த்து கூறுவார் எல்லோருக்கும் துரோகம் செய்பவர் என்று, தமிழ்நாட்டில் துரோகத்திற்கான நோபல் பரிசு இவருக்குதான் கொடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து 53 ஆண்டுகளாக கட்சிக்காக பணியாற்றிய எனக்கு விளக்கம் கேட்காமலேயே திடீரென நீக்கம் செய்தது வேதனையாக உள்ளது.நான் இன்னும் அதிமுக தொண்டனாகவே உள்ளேன். எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் கட்சியிலிருந்து நீக்கியது தவறு. அதனை சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பேன் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.