

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், கடந்த ஆறு மாதங்களாக கட்சிக்கு எதிராக இருந்தார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை அதிமுகவிலிருந்து நீக்கி உத்தரவிட்டார். இது குறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது, அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்ததற்காக கட்சி சார்பற்ற பாராட்டு விழாவில், நான் பங்கேற்றேன். ஆனால், செங்கோட்டையன் பங்கேற்காமல், அந்த நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லை. அதனால்தான் பங்கேற்கவில்லை என்று கூறினார்.
ஆனால், தமிழக அரசின் இலவச சைக்கிள் கொடுக்கும் விழாவில் செங்கோட்டையன் பங்கேற்றார். அந்த விழாவில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்டோரின் புகைப்படங்கள்தான் இருந்தன. சைக்கிள் கொடுக்கும் விழாவில் எங்கே ஜெயலலிதா படம்? என்று கேட்டார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவிலிருந்து பிரிந்துசென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் கூறுகிறார். ஆனால், செங்கோட்டையன் சொல்பவர்கள் எல்லாம் பிரிந்து சென்றவர்கள் இல்லை. கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள். டிடிவி தினகரனை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கினார். இவர் எல்லாம் அதிமுக பற்றி கருத்துக் கூற கூடாது.
கட்சிக்கு ஓ. பன்னீர்செல்வம் உண்மையாக இல்லை. பிரிந்து சென்றவர்களை செங்கோட்டையன் சந்திக்கவில்லை. அவர் சந்தித்தவர்கள் எல்லாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள்.
இணைந்து பணியாற்றலாம் என்றபோது, ஓபிஎஸ்க்கு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போதும் அவர் கட்சிக்கு உண்மையாக இல்லை. ஓபிஎஸ் அவரது மகன் இருவரும் ஸ்டாலினுக்கு பூங்கொத்து கொடுத்து பேசுகிறார்கள்.
ஜெயலலிதா இருக்கும்போது செங்கோட்டையனின் அமைச்சர் பதவி மாவட்டச் செயலர் பதவி பறிக்கப்பட்டது. அவரை அமைச்சராக்கியது நான். நான் பொறுப்பேற்ற போதுதான், செங்கோட்டையனை மீண்டும் அமைச்சராக்கினேன்.
திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் செங்கோட்டையன். அதிமுக தலைமைக்கு விரோதமாகச் செயல்பட்டால் தலைமைக் கழகம் வேடிக்கை பார்க்குமா?
கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் சேர்ந்திருக்கிறார் செங்கோட்டையன். சட்டவிதிகளின்படியே செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவரும் ஒன்றிணைந்து 2026 தேர்தலில் திமுகவுக்கு பி டீமாக செயல்படுவதுதான் இவர்கள் திட்டம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க... துரோகம் செய்வதில் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் நோபல் பரிசு: செங்கோட்டையன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.