

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்று கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தெரிவித்தார்.
பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியில் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோருடன் இணைந்து பங்கேற்றதையடுத்து செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இது தொடர்பாக சனிக்கிழமை காலைவிரிவாகப் பேசுவேன் என்று செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். அதன்படி, கோபி அருகே குன்னம்பாளையத்தில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
“1972-இல் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்ததில் இருந்து கட்சியில் நிர்வாகியாக இருந்துள்னேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி 1989-இல்தான் கட்சிக்கு வந்தார். கட்சிக்காக 53 ஆண்டுகள் பல்வேறு வகைகளில் பாடுபட்டவன் நான்.
தேவர் ஜெயந்தி விழாவுக்காக பசும்பொன்னுக்கு கடந்த 30-ஆம் தேதி சென்றிருந்தேன். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரனை சந்தித்தேன்.
ஆனால் என்னிடம் விளக்கம் கேட்காமலே கட்சியில் இருந்து நீக்கியது எனக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது. தொடர்ந்து கட்சியில் இயங்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். எடப்பாடி பழனிசாமி என்னை அதிமுகவில் இருந்து நீக்கியது கட்சி விதிகளின்படி செல்லாது. அதற்கு எதிராக வழக்குரைஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வழக்குத் தொடுப்பேன்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்தார். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதன்பிறகு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். அதன் பிறகு நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டார். அப்போதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், இருந்து யார் திமுகவின் பி அணி எனத் தெரிந்து கொள்ளலாம்.
கொடநாடு கொலை வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என திமுக அரசிடம் எடப்பாடி பழனிசாமி ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை நாங்கள் பி அணி-ஆக இல்லை, எடப்பாடி பழனிசாமிதான் பி அணி-ஆக இருக்கிறார்.
கட்சிக்கு எதிராகச் செயல்பட்டவர்களுக்கு நான் ஆதரவாக இருப்பதாக கூறுவது தவறு. எடப்பாடி பழனிசாமி சர்வாதிகாரப் போக்கில் யாரை வேண்டுமானாலும் நீக்கலாம் என்ற நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
பதவி கொடுத்த சசிகலாவுக்கு துரோகம் செய்ததுபோன்று, நான்காண்டு காலம் தம்மை கட்டிக்காத்து ஆட்சி தொடர உதவிய பாஜகவுக்கு 2024 மக்களவைத் தேர்தல் நேரத்தில் கூட்டணியை முறித்துக்கொண்டு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. துரோகத்துக்கான நோபல் பரிசு அவருக்குத்தான் கொடுக்க வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் எடுத்த தவறான முடிவுகளால் சட்டப் பேரவை, மக்களவை, உள்ளாட்சித் தேர்தல் என அனைத்துத் தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை கட்சி சந்தித்துள்ளது” என்று அவர் பேசியுள்ளார்.
முன்னதாக, செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ஏராளமாளோர் அவரது வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.