

சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்னை எழும்பூரிலிருந்து கொல்லத்திற்கு நவம்பர் 14 முதல் ஜனவரி 16 வரை 2 மாதங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயிலானது வாரந்தோறும் வெள்ளி இரவு 11.55 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மறுமார்க்கத்தில் சனிக்கிழமை இரவு 7.35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் நண்பகல் 12 மணிக்கு மீண்டும் எழும்பூரை வந்தடைகிறது. இதேபோல் சென்னை சென்ட்ரலில் கொல்லத்திற்கு நவம்பர் 16 முதல் ஜனவரி 18 வரை 2 மாதங்களுக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது வாரந்தோறும் ஞாயிறு சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 4.30 மணிக்கு கொல்லம் சென்றடைகிறது. பின்னர் மறுமார்க்கத்தில் கொல்லத்திலிருந்து திங்கள் 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடைகிறது.
இதற்கான முன்பதிவு நவ.4ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை 08.00 மணிக்கு தொடங்குகிறது. கேரளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள்.
அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, நவம்பர் 16 ஆம் தேதி திறந்து, டிசம்பர் 27 ஆம் தேதி அடைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.