30 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.
தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
Published on
Updated on
3 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு தரிசித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஒரே இடத்தில் சைவ ஆலயமான நடராஜர் சந்நிதியும், வைணவ ஆலயமான தில்லை கோவிந்தராஜப் பெருமாள் ஆலயமும் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். பக்தர்கள் ஒரே இடத்தில் நின்று இங்கு சிவனையும், விஷ்ணுவையும் தரிசனம் செய்யலாம். 108 திவ்ய பிரதேசங்களில் ஒன்றாக திகழ்கிறது தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கனகசபையின் முன்பு கிழக்கு நோக்கி ராஜகோபுரத்துடன் கூடிய தனிக்கோயிலாக ஒரு சுற்றுடன் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, பலிபீடம், கொடிமரம், அர்த்தமண்டபம், மகாமண்டபவம் ஆகியவற்றுடன் உற்சவம் நடத்தும் வகையில் தனிக்கோயிலாக திகழ்கிறது.

திவ்ய தேசங்களில் இது தில்லை திருச்சித்திரக்கூடம் என்ற பெயரில் உள்ளது. இங்குள்ள மூலவர் கோவிந்தராஜர் அனந்த சயன கோலத்திலும், உற்சவரான தேவாதி தேவன் அமர்ந்த நிலையிலும் எழுந்தருளியுள்ளனர். மூலவர் சாத்விக விமானத்தன் கீழ் யோக சயனத்தில் உள்ளார். இவ்வாலத்தின் சுற்றுப்பிரகாரத்தில் சக்கரத்தாழ்வார், நரசிம்மர், உடையவர், வேணுகோபாலர், ஆழ்வார்கள், ஆண்டாள், ஆஞ்சநேயர் சந்நிதிகள் உள்ளன. புண்டரீகவல்லி தாயார் சந்நிதி நிருத்தசபை அருகே தனியே ஒரு சுற்றுப்பிரகாரத்துடன் உள்ள ஆலயம் உள்ளது. அருகில் கண்ணாடி மாளிகையும் உள்ளது. இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் (கிபி 717-782) இக்கோயில் கட்டப்பட்டது. மேலும் இரண்டாம் குலோத்துங்கன், கிருஷ்ணதேவராயர் மற்றும் அவரது தம்பி அச்சுதராயர் முதலியோர் இக்கோயிலின் திருப்பணியை மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது. மேலும் குலசேகர ஆழ்வார், மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியோரால் 32 பாசுரங்களால் மங்களாசாசனம் பாடப்பெற்ற திருக்கோயிலாகும்.

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் திருப்பணியை யொட்டி, கோயிலின் விமானம், ராஜ கோபுரங்கள், மகாமண்டபம், புண்டரீகவல்லி தாயார் சந்நிதி, கருடாழ்வார் சந்நிதி ஆகியவை 30 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன மகா சம்ரோக்ஷணம் (நவ.3) திங்கள் கிழமை தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தரிசித்தனர். இதனை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் முன்பு உள்ள நடனப்பந்தலில் அக்.30-ம் தேதி வியாழக்கிழமை காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. யாகசாலையில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு வியாழக்கிழமை காலை விஷ்வக்சேன ஆராதனம், அகல்மஷ ஹோமம், பஞ்சகவ்யி பிராசனம் மற்றும் வாஸ்துசாந்தி, ரக்க்ஷாபந்தனம் ஆகிய நிகழ்வுகளும், மாலை யாகமும் தொடங்கி நடைபெற்றது.

தொடர்ந்து மூன்று நாள்கள் யாகசாலையில் 7 கால யாக பூஜைகள் மற்றும் பூர்ணா கூதி, மகாதீபாரதனை நடைபெற்றன. திங்கள்கிழமை அதிகாலை 8ம் கால யாகசாலை பூஜையும், புன்ய ஹோமம், நித்யஹோமம் பூர்ணாகூதி மற்றும் மகா தீபாரதனை நடைபெற்று மேளதாளங்களுடன் கும்ப நீர் குடங்கள் புறப்பாடு நடைபெற்று ஊர்வலமாக சென்று கோயில் விமானங்களில் உள்ள கலசங்களில் பட்டாச்சாரியார்களால் கும்ப நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகாதீபாராதனை நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்று கோஷமிட்டு தரிசித்தனர். நிகழ்வில் சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதி, ஆய்வாளர் சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கோயிலில் மகாபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

தெரு நாய்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக தலைமைச் செயலர் ஆஜர்!

கோயில் திருப்பணிக்கான ஏற்பாடுகளை புவனகிரி மாறன் கோவிந்தசாமி மற்றும் குடும்பத்தினர் சம்ப்ரோஷணத்திற்க்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவினர் ஜே.சுதர்சனன், ஆர்.சௌந்தரராஜன், டி.திருவேங்கடவன் மற்றும் பொதுதீட்சிதர்கள் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் நேரடி மேற்பார்வையில் டிஎஸ்பி டி பிரதீப் தலைமையில் நகர காவல் நிலைய ஆய்வாளர் சிவானந்தன், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் கே அம்பேத்கர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சிதம்பரம் நகராட்சி சார்பில் நகரமன்ற தலைவர் கே.ஆர்.செந்தில்குமார், ஆணையாளர் தான் த.மல்லிகா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Summary

Thousands of devotees participated in the Kumbabhishekam ceremony at the Govindaraja Perumal Temple.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com