பிகாரில் கூறியதை பிரதமர் மோடி தமிழகத்தில் பேசுவாரா? முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் கூறிய கருத்துகளை பிரதமர் மோடி தமிழகம் வந்து பேசுவாரா? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்கோப்புப்படம்
Published on
Updated on
2 min read

தருமபுரி: பிகாரில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வாக்கு அரசியலுக்காக வெறுப்புப் பேச்சை பேசியிருக்கிறார். அவர் பிகாரில் பேசியதை தமிழகத்தில் வந்து பேசுவாரா என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

மேலும், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தில், பாஜகவுக்கு பயந்துபோயிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

பாஜக எப்படிப்பட்ட சதி செயலை செய்தாலும் தமிழகத்தில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தருமபுரியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி இல்ல திருமண விழாவில் அவர் மேலும் பேசியது:

திமுகவை பொருத்தவரை சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு கட்சிப் பணி அவர்களைத் தேடி வரும். நேற்றைய தினம் தமிழக அரசியல் கட்சிகள் பங்கேற்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தை சென்னையில் நடத்தினேன். பல்வேறு கருத்துகளையும் ஆலோசனைகளும் கூட்டத்தில் வழங்கப்பட்டது.

வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். என்ற தேவையற்ற செயலை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதைத் தடுப்பதற்கான முயற்சியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் முழுமையாக வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரமாகும். இதை தான் பிகார் மாநிலத்தில் மேற்கொண்டனர்.

பீகார் மாநிலத்தில் இது மேற்கொண்டபோது தமிழகத்திலிருந்து தான் முதல் எதிர்ப்பு எழுந்தது.

இதுகுறித்து வழக்கு தொடுத்த நிலையில் தேர்தல் ஆணையம் அதற்கு தகுந்த விளக்கத்தை அளிக்கவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை தடுத்து நிறுத்ததான் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த பிரச்னையில் இரட்டை வேடத்தை மேற்கொள்கிறார்.‌ தேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க பயப்படுகிறார்.

பாஜக எப்படிப்பட்ட சதி செயலை செய்தாலும் தமிழகத்தில் அவர்கள் ஒன்றும் செய்ய முடியாது. பிரதமர் அவர்கள் பிகாரில் வாக்கு அரசியலுக்காக நாடகத்தை நடத்தி இருக்கிறார். 2026 தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சி நிச்சயம் அமையும் என்றார்.

பிகார் மக்கள், தமிழகத்தில் வந்து பணிபுரியும், தொழில் செய்யும் வாழும் பிகார் மக்கள் தமிழகம் குறித்தும், அவர்களுக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்புகள் குறித்து நல்ல விதத்தில் பேசியிருக்கிறார்கள். ஆனால், வாக்கு அரசியலுக்காக நாடகத்தை நடத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. பிகாரில் பேசிய கருத்துகளை, தமிழ்நாட்டில் வந்து பேசுவாரா பிரதமர் மோடி? யார் என்ன சதி செய்தாலும் அவதூறுகளை பரப்பினாலும் 2026ல் திமுக தலைமை வகிக்கும் ஆட்சி நிச்சயம் அமையும் என்பதை சொல்லிக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், எ.வ. வேலு, சிவசங்கர், ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Summary

Chief Minister Stalin questioned whether Prime Minister Modi would come to Tamil Nadu to repeat the comments he made in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com