வெண்ணை மலை கோயில் நில ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் வாக்குவாதம்! 4 பேர் மயக்கம்

நில ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் 4 பேர் மயக்கம்.
மயக்கமடைந்த பெண்ணை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் போலீஸார்.
மயக்கமடைந்த பெண்ணை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் போலீஸார்.
Published on
Updated on
3 min read

கரூர்: கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடையை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை சென்றபோது, பொதுமக்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் வாக்குவாத்தில் ஈடுபட்டவர்களில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மயக்கமடைந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் வெண்ணை மலையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 1962 ஆம் ஆண்டுக்கு முன்பே சிலர் வருவாய் துறை மூலம் நிலத்தை வாங்கி அவர்களது பெயரில் பட்டா போட்டு வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

தற்போது சுமார் 150-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் கோயில் நிலத்தில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் கோயில் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்களிடமிருந்து கோயிலுக்கு குத்தகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்திருந்தார்.

ஆனால், போதிய நடவடிக்கை எடுக்கப்படாததால் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களிடம் வாடகை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை ஒப்பந்த முறையில் குத்தகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சீல் வைக்காத வகையில் கடைகளுக்கு முன் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் சீல் வைக்காத வகையில் கடைகளுக்கு முன் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை ஆய்வு செய்து அவற்றின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களை வாடகை ஒப்பந்ததாரர்களாக மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு கோயில் நிலத்தில் இருப்பவர்கள் கோயிலுக்கு குத்தகை செலுத்தத் தவறினால் அவர்களை அங்கிருந்து அகற்றி விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து, வெண்ணைமலை கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்த 13 கடைகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் அண்மையில் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை போதுமானதாக இல்லை எனக் கூறி திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு எந்தவித கருணையும் காட்டக்கூடாது, எந்த சலுகையும் காண்பிக்க கூடாது, மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகம் உரிய ஒத்துழைப்பு வழங்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அன்மையில் நீதிபதிகள் எச்சரித்து இருந்தனர்.

இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக வெண்ணமலையில் கரூர் - சேலம் சாலையில் கூடி இருந்த பொதுமக்கள்.
இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக வெண்ணமலையில் கரூர் - சேலம் சாலையில் கூடி இருந்த பொதுமக்கள்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை காலை இந்து சமய அறநிலைத்துறையின் உதவி ஆணையர் ரமணி காந்தன் மற்றும் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கோயில் நிலத்தில் குடியிருப்பவர்களின் வீட்டின் அருகே இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் வைக்கப்பட்ட ஆக்கிரமிப்பு தொடர்பான எச்சரிக்கை தகவல் பலகைகளை பார்வையிட்டனர்.

அப்போது வருவாய் துறை அதிகாரிகளிடம் திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் நீதிமன்ற உத்தரவின்படி, கடைகளுக்கு உடனே சீல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் இங்கிருந்து நான் செல்ல மாட்டேன் என கூறியதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், கரூர் - சேலம் சாலையில் உள்ள சந்திரசேகர் என்பவரது இரு கடைகளுக்கு சீல் வைக்க முற்பட்டனர்.

அப்போது, நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அதிகாரிகளிடம் இருந்து வாக்குவாதம் செய்து சீல் வைப்பதைத் தடுத்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் கோட்டாட்சியர் முகமது பைசல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் நாங்கள் பணம் கொடுத்து நிலத்தை வாங்கியுள்ளோம், கோயில் நிலம் என தெரிந்தும் அதிகாரிகள் ஏன் எங்களுக்கு எங்கள் பெயரில் பதிவு செய்து கொடுத்தார்கள், முதலில் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, பின்னர் எங்கள் மீது நடவடிக்கை எடுக்க வாருங்கள் என்றும், எங்களது இடத்தை எங்கள் பெயரிலேயே எழுதிக் கொடுக்க வேண்டும், கோயிலுக்கு வேண்டிய குத்தகை தொகையை நாங்கள் செலுத்தி விடுகிறோம், அவ்வாறு இல்லையெனில் எங்கள் நிலத்திற்கு பதில் வேறு இடத்திற்கு மாற்று இடம் தாருங்கள் எனக் கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திடீரென சந்திரசேகருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, திடீரென மூன்று பெண்கள் மயக்கம் அடைந்தனர். அவர்களையும் போலீஸார் மீட்டு ஆம்புலன்ஸில் கரூர் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழல் உருவாகியுள்ளது.

Summary

Four people fainted in an argument with officials who went to remove land encroachments.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com