

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் செவ்வாய்க்கிழமை காலை இணைந்தார்.
மேலும், தனது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று மாலை 4 மணிக்கு முறைப்படி ராஜிநாமா செய்யவுள்ளதாகவும் மனோஜ் பாண்டியன் அறிவித்துள்ளார்.
ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகவுள்ள மனோஜ் பாண்டியன், சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை நேரில் சந்தித்து, அக்கட்சியில் இணைந்து கொண்டார்.
இந்த நிகழ்வின்போது, திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், கே.என். நேரு, கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய மனோஜ் பாண்டியன் பேசியதாவது:
"திராவிட உரிமைகளைக் காக்கும், தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் தலைவராகவும், தமிழக உரிமைகளை அடகு வைக்காதவராகவும் முதல்வர் ஸ்டாலின் இருப்பதால் திமுகவில் இணைந்துள்ளேன்.
இன்று மாலை 4 மணிக்கு எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்யவுள்ளேன். பாஜகவின் கிளை அலுவலகமாக அதிமுக செயல்படுகிறது.” எனத் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டதால் அதிமுகவில் இருந்து மனோஜ் பாண்டியன் நீக்கப்பட்டார்.
அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, 2001 ஆம் ஆண்டு சேரன்மகாதேவி தொகுதியிலும், 2021 ஆம் ஆண்டு ஆலங்குளம் தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2010 முதல் 2016 வரை அதிமுக சார்பில் மாநிலங்களை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளதால், தற்போது ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை ஒன்றாக குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.