

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம் தொடர்பாக துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே தடவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கல்லூரி மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த 3 பேரை துடியலூர் அடுத்த வெள்ளகிணறு பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே தனிப்படை போலீஸார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர்.
கூட்டு பாலியல் வன்கொடுமை
மதுரையைச் சேர்ந்தவர் 21 வயது இளம்பெண். இவர் கோவையில் விடுதியில் தங்கி தனியார் கலைக் கல்லூரியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த இருசக்கர வாகன உதிரிபாக விற்பனைக் கடை நடத்தி வரும் 25 வயது இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இருவரும் காரில் வெளியே சென்றுள்ளனர். பின்னர், கோவை விமான நிலையத்தின் பின்புறம் குடியிருப்புகள் இல்லாத பகுதியில் இரவு 11 மணியளவில் காருக்குள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர்.அப்போது, அங்கு வந்த 3 பேர் காருக்குள் இருந்த இருவரையும் வெளியே வருமாறு மிரட்டியுள்ளனர். அந்தக் கும்பலின் நடவடிக்கையைக் கண்டு அச்சமடைந்த அவர்கள் தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதையடுத்து, அந்தக் கும்பல் காரை தடுத்து நிறுத்தி அரிவாளால் கண்ணாடியை உடைத்து கதவைத் திறந்துள்ளனர். பின்னர், அந்த இளைஞரை தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளனர். பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, அந்தப் பெண்ணை அருகில் உள்ள புதருக்குள் தூக்கிச் சென்று கத்தி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
சுட்டுப் பிடிப்பு:
இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் குணா தவசி, சதீஷ் கருப்பசாமி, கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோர் துடியலூர் அருகே பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது. போலீஸார் அந்தப் பகுதிக்குச் சென்று அவர்களைப் பிடிக்க முயன்றனர்.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் மூன்று பேரை போலீஸார் பிடிக்கச் சென்றபோது, அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதில் சந்திரசேகர் என்ற தலைமைக் காவலருக்கு இடதுகை மணிக்கட்டில் வெட்டு விழுந்துள்ளது. தொடர்ந்து காவலரை வெட்டிவிட்டு தப்பி ஓடிய மூன்று பேர் மீதும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் மூன்று பேர் காலிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து அவர்கள் கீழே விழவே, அவர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ)கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் என்பது தெரியவந்தது.
நடந்தது என்ன?
பின்னர், காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் 3 பேரையும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீஸார், அரிவாளால் வெட்டப்பட்டதில் இடது கை மணிக்கட்டில் காயமடைந்த தலைமைக் காவலர் சந்திரசேகரையும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் தப்பி ஓடிய குற்றவாளிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது. போலீஸார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டட வேலை பார்த்து வருந்ததும் தெரியவந்துள்ளது.
தடவியல் நிபுணர்கள் சோதனை
கோவையில் நடந்த சுட்டுப் பிடிப்பு சம்பவம் தொடர்பாக துடியலூர் அடுத்த வெள்ளக்கிணறு அருகே தடவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க: கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.