

சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி நிர்வாகிகளை அறிவித்துள்ளார் திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின்.
இன்று இது குறித்து திமுக சார்பில் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக க. பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொன்முடியிடமிருந்து துணைப் பொதுச் செயலர் பதவி கடந்த ஏப்ரல் மாதம் பறிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக பணியாற்றி வந்த சாமிநாதன், துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக பொறுபாளராக இல. பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து இல. பத்மநாபன் வகித்து வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பு கே. ஈஸ்வரசாமிக்கு வழங்கப்படுகிறது.
வேலூர் தொகுதியை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரித்து மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் வேலூருக்கு 2 திமுக பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் கட்சித் தலைவர். வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து வேலூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக ஏ.பி. நந்தகுமார் எம்எல்ஏ, காட்பாடி, கீழ்வைத்தியணான்குப்பம் பகுதிகளை உள்ளடக்கிய வேலூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக டி.எம். கதிர் ஆனந்த் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஐ. பெரியசாமி, திருச்சி சிவா, ஆ. ராசா, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி என திமுகவில் ஐந்து துணைப் பொதுச் செயலாளர்கள் பதவி வகித்து வரும் நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க.. திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.