நாலரை மணி நேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக இபிஎஸ் அடுக்கடுக்கான கேள்வி...
எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமிகோப்புப் படம்
Published on
Updated on
2 min read

கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவியை 100 காவலர்கள், 4.25 மணிநேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் போனது ஏன்? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவை சர்வதேச விமான நிலையம் பின்புறமுள்ள காலியிடத்தில் காரில் அமர்ந்து ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த சட்டக் கல்லூரி மாணவியை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 3 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கோவை காவல்துறை, தப்பிச் சென்ற மூவரையும் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் அளித்த விளக்கத்தை தொடர்ந்து, தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

”கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு பற்றி விளக்கம் அளித்த கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர், ஞாயிற்றுக் கிழமை இரவு 11:20 மணிக்கு காவல்துறைக்கு மாணவியின் நண்பர் தொடர்பு கொண்டு உதவி கோரியதாகவும், 11:35 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தான் மாணவியைக் கண்டதாகவும், அதுவும் அம்மாணவி தானாக வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்தார். இரவு 11:35 மணி முதல், அதிகாலை 4 மணி வரை, 4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்துகொண்டு இருந்தது காவல்துறை? என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வி.

குற்றவாளிகளை பிடித்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் பொம்மை முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது காவல்துறையால் சம்பவ இடத்தில் நின்றுக்கொண்டே நான்கரை மணி நேரம் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனதற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். 100 போலீசார் இணைந்து பெரிய தேடுதல் வேட்டை நடத்தியதாக காவல் ஆணையர் சொல்கிறார். நான்கரை மணி நேரம், 100 போலீசாரால் சம்பவ இடத்தில் இருந்த பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.

’காவல்துறையால் கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு மாணவி எப்படி சென்றார்?’ என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, "சிறிய சுவர் ஒன்று இருந்தது; அதை தாண்டிச் சென்றதால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்ற காவல் ஆணையர், சில நிமிடங்களில், ’மிகப்பெரிய சுவர் இருந்தது; அதை தாண்டிச் சென்று அந்த மாணவி இருந்தார்’ என தனது கருத்தை மாற்றினார். அங்கு இருந்தது சிறிய சுவரா? பெரிய சுவரா? ஏன் அதைத் தாண்டி காவல்துறை, அதுவும் 100 பேர் கொண்ட படை, சென்று தேடவில்லை? ’இருள் சூழ்ந்த தனிமையான இடம் என்பதால் பாதிக்கப்பட்ட மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை’ என்ற விளக்கத்தை அளிக்கவே திமுக அரசின் காவல்துறை கூச்சப்பட வேண்டும். நள்ளிரவில் ஒரு பெண்ணை சம்பவ இடத்தில் தேடிக் கண்டுபிடிக்க திமுக அரசின் காவல்துறைக்கு துப்பில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறதா திமுக அரசு? இந்த சூழலில், "ஆக... குற்றவாளிகள் கைது, குற்றப் பத்திரிகை ஒரு மாதத்தில் தாக்கல் செய்து விடுவோம்" என்று பெருமை பேசுகிறார் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதற்கு முன்னால், உங்கள் காவல்துறை 4 மணி நேரம் 25 நிமிடம் பாதிக்கப்பட்ட மாணவியைக் கண்டுபிடிக்க வக்கில்லாமல் போனது ஏன்? என்பது பற்றி விளக்கம் அளிக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் மறந்துவிட்டால், காவல்துறை உங்கள் கட்டுப்பாட்டில் தான் உள்ளது (ஏட்டளவில்).” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Four and a half hours, 100 police officers... Why wasn't the student found? EPS question

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com