

எதிர்வரும் 2026 பொதுத் தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும்தான் போட்டி என்று தவெக விஜய் தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் தலைமையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு அதிகாரம் உள்பட 12 தீர்மானங்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் விஜய் பேசியதாவது:
”நம்முடைய குடும்ப உறவுகளை இழந்து வேதனையிலும் சொல்லமுடியாத வலியிலும் இத்தனை நாள் இருந்தோம். சொந்தங்களின் மனம் பற்றி இருக்கவேண்டியது நமது கடமை. அதனால்தான் அவர்களுடன் இணைந்து அமைதிகாத்து வந்தோம்.
இந்தச் சூழலில் நம்மை பற்றி வன்ம அரசியல் வலைகள், அர்த்தமற்ற அவதூறுகள் பிண்ணப்பட்டன, பரப்பப்பட்டன. இவற்றையெல்லாம் சட்டம், சத்தியத்தின் துணையோடு துடைத்தெறிய போகிறோம்.
இந்தியாவில் எந்த அரசியல் தலைவருக்கும் கொடுக்கப்படாத கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பிரசார இடத்தேர்வு என்பது கடைசி வரை இழுபறியாகவே இருக்கும். பெரிய இடத்தை தேர்வு செய்து கொடுத்தால்,நெருக்கடியான இடத்தை நமக்கு கொடுப்பார்கள்.
அரசியல் காழ்ப்புடன் நேர்மை திறனற்று நம்மை பற்றி குற்றம் சாட்டியுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்வருக்கு ஒரு சில கேள்விகள், திமுக அரசின் கபட நாடகத்தை தாங்கிப் பிடிக்க இயலாமல் உச்ச நீதிமன்றத்தில் திக்கித்திணறி நின்றது மறந்துவிட்டதா?
கரூர் சம்பவத்துக்குப் பிறகு அவசஅவரமாக தனிநபர் ஆணையம், தனிநபர் ஆணையத்தை அவமதிக்கும் வகையில் அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு. இதெல்லாம் ஏன் நடக்கிறது? என்பதை மக்கள் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இதெல்லாம் முதல்வர் மறந்துவிட்டாரா?
மீண்டும் சொல்கிறேன் 2026-ல் திமுக மற்றும் தவெக இடையே மட்டும்தான் போட்டி, இந்தப் போட்டி இன்னமும் வலுவாக மாறப்போகிறது, 100% வெற்றி நமக்கே” என்றார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.