கரூர் சம்பவம் திட்டமிட்டு நடந்ததா இல்லையா என்பது சிபிஐ விசாரணை மூலம் தெரிய வரும் என்று தெரியும் அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் பல்வேறு பகுதிகளில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. திருச்சி மாநகரம் 12-வது வார்டு வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ்,
"வாக்குச்சாவடி உதவி அலுவலர் 2 (பிஎல்ஏ 2) என்பவர்கள் எஸ்ஐஆர் கணக்கெடுப்பிற்கு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு(பிஎல்ஓ) உதவியாகத்தான் செல்கிறார்கள். பிஎல்ஏக்கள் மக்களை இன்புளுயன்ஸ் செய்வதில்லை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்தான் எஸ்ஐஆரை ஆதரிக்கிறார்கள், நாங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். அதனால் எஸ்ஐஆர் நேர்மையாக நடக்க வேண்டும் என விரும்புகிறோம்.
புதிய பாடத்திட்டத்தை வகுக்க 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுக்கு தயாராவது, அறிவியல், தொழில்நுட்ப அறிவை வளர்ப்பது உள்ளிட்டவற்றை மையப்படுத்தி புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவர்கள் விசாரணையில் அந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததா, இல்லையா என்பது தெரியும்.
புதிதாக 13 பள்ளிகள் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையை தொடங்க வலியுறுத்தியுள்ளோம். அந்தந்த பகுதியில் இருக்கும் மண்டபங்கள் உள்ளிட்ட இடங்களில் பள்ளிகள் செயல்படும், பின்னர் புதிதாக பள்ளிக் கட்டடங்கள் கட்டப்படும்.
பள்ளிகளின் நுழைவாயிலில் சிசிடிவி அமைப்பதற்கு விரைவில் டெண்டர் விடப்படும்.
மேல்நிலைப் பள்ளிகளில் அக்கவுண்டன்சி தேர்வின்போது கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை வைத்தனர். அவர்கள் கோரிக்கைக்கு ஏற்ப கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.