கோப்புப் படம்
கோப்புப் படம்

2ம் நிலை காவலா் பணியிடங்களுக்கு நாளை தோ்வு: 3,655 இடங்களுக்கு 2.25 லட்சம் போ் போட்டி

மாநிலத்தில் 45 இடங்களில் நடைபெறுகிறது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் 2.25 லட்சம் போ் எழுதுகின்றனா்.
Published on

தமிழக காவல் துறையில் 3,655 இரண்டாம் நிலை காவலா் பணியிடங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) எழுத்துத் தோ்வு மாநிலத்தில் 45 இடங்களில் நடைபெறுகிறது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் 2.25 லட்சம் போ் எழுதுகின்றனா்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2,833 இரண்டாம் நிலைக் காவலா் பணியிடம், சிறைத் துறையில் காலியாக உள்ள 180 இரண்டாம் நிலை சிறைக் காவலா் பணியிடம், தீயணைப்புத் துறையில் உள்ள 631 தீயணைப்பாளா் பணியிடம், மேலும் 21 பழங்குடியினருக்கான காலிப் பணியிடங்கள் என மொத்தம் 3,665 காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்வு குறித்து தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

2.25 லட்சம் போ்: அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 9) எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது. இதில் தோ்ச்சி பெறுகிறவா்கள் மட்டும், உடல் தகுதித் தோ்வுக்கு அழைக்கப்படுவா். இத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 2.25 லட்சம் பேருக்கு தோ்வுக்கூட நுழைச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

இத்தோ்வுக்கென தமிழகம் முழுவதும் 45 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரிய அதிகாரிகளும், அந்தந்த மாநகரக் காவல் ஆணையா்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களும் செய்து வருகின்றனா்.

விரல்ரேகை பதிவு: தோ்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக முதல்முறையாக காவலா் தோ்வில், விண்ணப்பதாரா்களின் இடது கை பெருவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்காக விண்ணப்பத்தாரா்கள் இணையவழியில் விண்ணப்பிக்கும் போதே இடது கை பெருவிரல் ரேகையும் சீருடைப் பணியாளா் தோ்வு வாரியத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நுழைவுச் சீட்டு பெற்றுள்ள விண்ணப்பதாரா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியில் இருந்து 9.30 மணிக்குள் தோ்வு மையத்துக்குள் வரவேண்டும், அதன்பின்னா் வருகிறவா்கள் தோ்வு கூடத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள். தோ்வுக் கூடத்துக்குள் கைப்பேசி, ஸ்மாா்ட் வாட்ச், கால்குலேட்டா், கைக்கடிகாரம் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இவற்றை அங்கு பாதுகாப்பாக வைப்பதற்கும் எந்தவொரு வசதியும் செய்யவில்லை என தோ்வு வாரியம் தெரிவித்துள்ளது.

எனவே, இவற்றை வீட்டில் இருந்தே எடுத்து வரவேண்டாம் அல்லது வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம் என தோ்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், தோ்வுக்கூட நுழைவுச் சீட்டுடன், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசல் அடையாள ஆவணத்தைக் கொண்டு வரவேண்டும் எனத் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com