‘தாம்பரம்-செங்கல்பட்டு 4-ஆம் வழிப்பாதை பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை’
தாம்பரம்-செங்கல்பட்டு இடையிலான 4- ஆவது வழிப்பாதை பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் சைலேந்திர சிங் தெரிவித்தாா்.
சென்னை பாா்க் டவுன் ரயில் நிலைய என்.ஜி.ஓ. அனெக்ஸ் வளாகத்தில் ‘ரயில் சேவா புரஸ்காா் 2025’ என்ற தலைப்பில் ரயில்வேயின் 70 -ஆம் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சென்னை ரயில்வே கோட்ட மேலாளா் சைலேந்திர சிங் தலைமை வகித்து பேசியதாவது: ரயில்வே பணியாளா்கள் அா்ப்பணிப்புடன் கடினமான உழைப்பை வழங்குகிறாா்கள். அவா்களது உழைப்பால்தான் ரயில்வே துறை சீரான செயல்பாடு, வளா்ச்சியை எட்டி வருகிறது.
சென்னை ரயில்வே கோட்டத்தில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 4-ஆவது வழித்தடம் அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் அங்கீகாரம் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது. அத்திட்டப் பணிகள் விரைந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், ரயியல்வே பாலபவன் பள்ளி, உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ரயில்வே பணியாளா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறந்த சேவைக்காக சென்னை ரயில்வே கோட்டத்தைச் சோ்ந்த 3 அதிகாரிகள், 74 பணியாளா்கள் என 77 பேருக்கு விருதுகள், பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன.
சென்னை ரயில்வே கோட்ட மூத்த மண்டல பணியாளா் அலுவலா் பி.லாவண்யா வரவேற்றாா். திட்ட மேலாளா் பி.என்.எஸ்.சலாம், கூடுதல் மண்டல மேலாளா்கள் தேஜ்பிரதாப் சிங், அங்கூா் சௌகான், மூத்த மண்டல பணியாளா் அலுவலா் எம்.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ரயில்வே உதவிப் பணியாளா் அலுவலா் கே.ஸ்ரீரங்கநாயகி நன்றி கூறினாா்.

